''கொரோனா நம்மை விட்டு போகவில்லை.. அலட்சியம் வேண்டாம்''.. மக்களுக்கு அலர்ட் கொடுக்கும் மா.சு!
சென்னை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்றது. தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி சென்றது. அதன்பிறகு தமிழ்நாட்டில் புதியதாக அமைந்த திமுக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுத்தது.
தமிழ்நாட்டில் ஆக்ஜிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு உள்ளிட்ட சவாலான போக்கை அரசு திறம்பட சமாளித்தது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா அடியோடு சரிந்தது.

அதிகரித்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2,000-க்குள் கீழ் வந்தது. இதனை தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அனைத்து கடைகள், மால்கள் திறக்கப்பட்டன. ஆனால் அரசு கொடுத்த தளர்வுகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. மீன் மார்க்கெட், காய்கறி மார்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டம் அலைமோதியது.

மாஸ்க் மறந்த மக்கள்
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல், மாஸ்க் போடுவதை மக்கள் மறந்து விட்டதால் தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்தது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளிலும் தொற்று வேகம் எடுத்துள்ளது.

அலட்சியம் கூடாது
இந்த நிலையில் சென்னையில் இன்று பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் '' கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டு முழுவதுமாக அகலவில்லை. எனவே மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அலட்சியம் கூடாது. தமிழகத்தில் இன்று கூட 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினார்.
Recommended Video

சேலம், கோவையில் கட்டுப்பாடுகள்
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் தொற்று அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு, சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications