செங்கொடிக்கு செய்யும் துரோகம்.. பரபரப்பை கிளப்பிய மகேந்திரன் பதிவு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தியா?
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சி மகேந்திரன் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சுயநலத்திற்காக சிலரை தூக்கிப்பிடிப்பதும், சிலரை தூக்கி எறிவது, நீங்கள் தூக்கிப்பிடிக்கும் செங்கொடிக்கு செய்யும் துரோகம் என்று அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இன்னும் 8 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்படுகிறது.

இதில் தங்கள் பக்கம் கூட்டணி கட்சிகளை இழுக்க ஒவ்வொரு கட்சிகளும் முயற்சித்து வருகிறார்கள். இதற்கிடையே பாமக இன்னும் தன் நிலைப்பாட்டை கூறவில்லை. தந்தை மகன்களுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருவதால் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மதிமுகவிலும் மல்லை சத்யா நீக்கப்பட்டது அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சி மகேந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சி மகேந்திரன். இவர் சமீப நாட்களாக அக்கட்சியின் செயல்பாடுகள், பொறுப்புகளில் இருந்தே விலகியே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் இன்று ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- "சுயநலத்திற்காக சிலரை தூக்கிப்பிடிப்பதும், சிலரை தூக்கி எறிவது, நீங்கள் தூக்கிப்பிடித்து செங்கொடிக்கு செய்யும் துரோகம் என்பதை எப்பொழுதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள்? இது எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டுமே!" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தான் அக்கட்சியில் உட்கட்சி மோதல் இருப்பதை காட்டுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இது தொடர்பாக சி மகேந்திரன் கூறுகையில், "ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக இதனை நான் சொல்லவில்லை.. கோட்பாடு ரீதியாகவே இந்த பிரச்சனையை பேசுகிறேன்.. கம்யூனிஸ்டு கட்சியினர் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு இருக்கின்றனர். ஒழுங்குப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்பது தான் கம்யூனிஸ்டுகளின் முக்கியமான பண்பாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாவே கம்யூனிஸ்டுகளிடையே பண்பு மீறல் அதிகமாகிவிட்டது. கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் சக தோழர்களை சுயநலத்துடன் அணுகுதல் கூடாது..
வெறுப்பினை காட்டக்கூடாது. மனதால் கூட ஒரு சக தோழரை இழிவுப்படுத்தக் கூடாது. இத்தகைய பண்புகளை இழந்தால், அடுத்தக்கட்ட அரசியலை செய்ய முடியாது.. கட்சியின் உட்கட்டமைப்பும் வலுவிழந்துவிடும். கம்யூனிஸ்ட் கட்சியை ஜனநாயகப்படுத்த வேண்டும்.. வலிமைப்படுத்த வேண்டும் என்ற என் மனக்குமுறல் தான் இந்த பதிவு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications