Nallakannu: நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு! சீராக்க போராடும் மருத்துவர்கள்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் (101) உடல்நிலையை சீராக்க, கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது: நல்லகண்ணு உடல்நிலையை சீராக்க அதிதீவிர முயற்சியுடன் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம். அவருக்கு அளிக்கப்படும் செயற்கைச் சுவாசக் கருவி சிகிச்சை, மருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 8ஆம்தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுவுக்கு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் அவரது உடல்நிலை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனைக்கு கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் விரைந்தனர். அது போல் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு மருத்துவர்களிடம் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வீரபாண்டியன் கூறுகையில், நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக போராடிய நல்லகண்ணு தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் சென்றிருந்தார். இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications