ஐஐடி இயக்குநர் பதவியை மட்டுமல்ல.. காமகோடியின் முனைவர் பட்டத்தையே பறிக்கணும்.. கொதித்த மார்க்சிஸ்ட்!
சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து முனைவர் பட்டத்தை பறிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கோமியம் குறித்த ஐஐடி இயக்குநரின் பேச்சு மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள கோசாலை ஒன்றில் மாட்டுப் பொங்கல் அன்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, பசுமாட்டு கோமியம் குடிப்பது நல்லது, மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காமகோடியின் பேச்சை பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். மாட்டு கோமியம் உடம்புக்கு கெடுதல் என ஏற்கனவே அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்ட நிலையில், அறிவியல் ரீதியான ஒரு பல்கலைக்கழகத்தில் இயக்குநராக இருந்து கொண்டு காமகோடி இப்படி கூறியிருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் காமகோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரா?
ஐ.ஐ.டி. இயக்குநரா?, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக சமூக நீதி நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை.
இயக்குநரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ் ஆதரவு பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல.
முனைவர் பட்டத்தை திரும்பப் பெற வேண்டும்
கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
மேலும் பாஜக ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம்சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என மத்திய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சிபிஐ கண்டனம்
முன்னதாக இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, சென்னையில் நடந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வில் பேசும்போது, தனது “தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் கோமியம் (கோமூத்திரம்) குடித்ததால் குணமானது” என்று கூறியுள்ளார்.
கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும் நிலையில், புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும்.
மனித உழைப்புக்கு உதவிய, உற்பத்தி ஆற்றலை பெருக்கிய கால்நடைகளின் உழைப்பை போற்றும் மாட்டுப் பொங்கலில், கால்நடைகளின் உழைப்பின் முக்கியத்துவத்தை பாராட்ட வேண்டிய இடத்தில், ஐஐடி இயக்குநர் அதன் கழிவை பயன்படுத்தும் பரப்புரையில் ஈடுபட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
