மின் கட்டண உயர்வு: திமுக கூட்டணியில் ஒரு எதிர்குரல்! மாதாமாதம் கணக்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும், 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் என்றும், அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேவையற்றது
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றாலும், மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என கூறியிருப்பது தேவையற்றது.

மக்கள் அச்சம்
இது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

கூடுதல் சுமை
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மாதாந்திர கணக்கெடுப்பு
இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்றும், மாதமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications