கம்யூனிஸ்டுகளையே காணோம்னு சொன்னீங்க.. எடப்பாடி பழனிசாமியின் வஞ்சக வலை.. சிபிஎம் பதிலடி!
சென்னை: கடந்த வாரத்தில் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளையே காணோம் என்ற எடப்பாடி பழனிசாமி, இந்த வாரத்தில் கூட்டணிக்கு அழைத்திருப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என்று கூறியுள்ள அவர், ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக்கிவிட்டன. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும் காலங்களில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் இணையலாம்.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக மற்றும் பாஜக அழைப்பு விடுத்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தேய்ந்து வரும் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்ற நிலை உள்ளது. சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுக்கிறார்.
4 ஆண்டுகளாக சிபிஎம் கட்சி எங்கு சென்றது? அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்வதற்கு திருமாவளவன் யார் என்றும் கேள்வி எழுப்பினார். இதன் மூலமாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக தனது கூட்டணி கதவை மூடிவிட்டதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இவ்வளவு அசிங்கப்பட்டும் திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்தார். இதன் மூலம் 4 நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணிக்கான அழைப்பை விடுத்துள்ளார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி. போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்று பதிலளித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சிபிஎம் நிராகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications