ஐரோப்பிய சித்தாந்தம்.. கல்லூரிக்கு வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி! சென்னையில் சிபிஎம் போராட்டம்
சென்னை கொரட்டூரில் தனியார் கல்லூரிக்கு வருகை தந்த ஆளுநர் ரவிக்கு சிபிஎம் உறுப்பினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
சென்னை: தனியார் கல்லூரியில் விழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து அவருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிகளுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சனாதனம் குறித்து கருத்து தெரிவிப்பது, திராவிட மாடல் குறித்து கேள்வியெழுப்புவது, திருக்குறளின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு குறித்து விமர்சித்திருந்தது, தமிழ்நாடு-தமிழகம் என அவர் பேசிய விஷயங்கள் அனைத்திற்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் உச்சமாக இருப்பதுதான் தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் சம்பவம். அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களால் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே இதற்கு எதிராக உறுதியான தடை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஆன்லை தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு இயற்றியது.
சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக இது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் அவற்றை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். இது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி நேரில் சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்துதான் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபுறம் கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் குறித்து அவர் பேசியிருந்த கருத்துக்கள் இடதுசாரி கட்சிகளிடையே ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் அந்நிய நாட்டினுடையது என்று கூறியிருந்தார். இதற்கு கட்சியின் மாநில செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவங்கள் மற்றும் அந்த அமைப்பினர் பின்பற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஐரோப்பாவின் நாஜி அமைப்பினரிடமிருந்து கடன் பெறப்பட்டதே. இவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை விமர்சிப்பதா? என்று கேள்வியெழுப்பினார். மேலும், ஆளுநரின் பேச்சுக்கு எதிராக அவர் எங்கு சென்றாலும் கறுப்புக்கொடி காட்டுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். அந்த வகையில் இந்த போராட்டம் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.

அப்போதிலிருந்து ஆளுநர் பங்கேற்கும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆளுநர் வந்திருந்த நிலையில், சிபிஎம் வடசென்னை மாவட்ட குழு சார்பாக இந்த கட்சி உறுப்பினர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications