சென்னையில் வானில் இருந்து விழுந்து கொத்து கொத்தாக சாகும் காகங்கள்! பீதியில் மக்கள்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கொத்து கொத்தாக காகங்கள் விழுந்து சாகின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் காகங்களை தொட வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆங்காங்கே பூங்காங்கள் உள்ளன. இந்த பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு விளையாட்டு திடலாக இருப்பதோடு, மக்கள் ஓய்வெடுக்கவும், நடைப்பயிற்சி செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடையாறு இந்திரா நகரில் பூங்கா அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக இந்த பூங்காவில் காகங்கள் மர்மமான முறையில் இறக்கின்றன. வானில் பறக்கும் காகங்கள் திடீரென்று கீழே விழுந்து இறக்கின்றன. இதனால் பூங்காவிற்கு செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து பூங்காவிற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழங்கத்துக்கு ஆய்வுக்கான அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி பூங்காவில் பணியாற்றி வரும் காவலாளி குட்டி கூறுகையில், ,‛‛ கடந்த 4 முதல் 4 நாட்களாக பூங்காவில் காகங்கள் விழுந்து இறக்கின்றன. வானில் இருந்து கீழே விழுந்து இறக்கும் காகங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. வானில் இருந்து கீழே விழும் காகங்கள் உடனடியாக இறப்பது இல்லை. ஒருநாள் முழுவதும் காகங்கள் நின்ற இடத்திலேயே நின்று மடிகின்றன. '' என்றார்.
இதுபற்றி மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலா கூறுகையில், ‛‛பூங்காவில் காகங்கள் விழுந்து இறப்பதன் பின்னணியில் அவைகள் தின்ற உணவு விஷமாக மாறி இருக்கலாம். அல்லது மாசுபட்ட தண்ணீரை குடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். காகங்களை மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் இந்த பூங்காவின் மேற்பகுதியில் மின்வயர்கள் செல்லவில்லை'' என்றார்.
சென்னை மாநகராட்சியின் கால்நடை அதகிாரி ஜே கமல் உசேன் கூறுகையில், ‛‛இதுபோன்று காகங்கள் இறக்கும் சம்பவங்கள் அடையாறில் சில இடங்களில் நடந்துள்ளது. இதற்கு வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆய்வறிக்கைக்கு அனுப்பி உள்ளோம். அது வர இன்னும் 2 நாட்கள் ஆகும்'' என்றார்.
இதற்கிடையே தான் பொதுமக்கள் யாரும் காகங்களை தொட வேண்டாம். ஏனென்றால் காகங்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். இதனால் காகங்களை தொடுவதன் மூலம் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவலாம். எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications
