மீண்டும் சொதப்பிய தேசிய தேர்வு முகமை.. ‘க்யூட்' தேர்விலும் குளறுபடி.. 3,765 பேருக்கு மறுதேர்வு
டெல்லி: மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை படிப்பதற்கான 'க்யூட்' தேர்வு இன்று நடந்தது. 'நீட்' தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தான் இந்த தேர்வையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கணினி வழியாக இந்த தேர்வு நடந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் தேர்வுகள் தாமதமாக தொடங்கிய நிலையில் 3,765 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை கலை அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 'க்யூட்' எனும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த 'க்யூட் 2026' (CUET 2026 அல்லது Common University Entrance Test 2026) தேர்வும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வுருகிறது. அதன்படி இன்று 'க்யூட் 2026' தேர்வு கணிணி வழியாக நடத்தப்பட்டது. இன்று காலை மற்றும் மதியம் 2 வேளைகளில் தேர்வு நடந்தது.

காலை 9 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் தேர்வு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு ஒன்றரை மணிநேரத்துக்கு முன்பாகவே மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இதனால் காலை தேர்வுக்கு 7.30 மணிக்கும், மதிய தேர்வுக்கு 12 மணிக்கும் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு சென்றனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் தேர்வு 3 மணிநேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு தொடங்கியது. அதேபோல் மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு தாமதமாக மாலை 4 மணிக்கு தொடங்கியது. தேர்வு தாமதத்தால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர். பலரும் பதற்றம் அடைந்தனர்.
மேலும் 3,765 மாணவர்கள் பயோமெட்ரிக் பதிவுகள் செய்தும் அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய தேர்வு முகமை சார்பில், ''கணிணி முறையில் தேர்வு நடத்தும் பணி டிசிஎஸ் ஐஓஎன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உரிய நேரத்தில் தேர்வு தொடங்கப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டது.
டிசிஎஸ் சார்பில், ''தொழில்நுட்ப பிரச்சனையால் காலையில் நடக்க வேண்டிய தேர்வு 2 மணிநேரம் தாமதமாகவும், மதியம் நடைபெற வேண்டிய தேர்வு ஒரு மணிநேரம் தாமதமாகவும் தொடங்கியது. தொழில்நுட்ப பிரச்சனை சரிசெய்யப்பட்டு எவ்வித பிரச்சனைகளுமின்றி தேர்வு நடைபெற்றது. தாமதமான தேர்விற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். கணினி அடிப்படையிலான தேர்வை நடத்த நாங்கள் தேசிய தேர்வு முகமை உடன் நெருக்கமாக சேர்ந்து செயல்பட்டு வருகிறோம்'' என விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications