மயிலாட்டம் -ஒயிலாட்டம்! தினமும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்! உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த சென்னை விழா!
சென்னை: சென்னை தீவுத்திடலில் சென்னை விழா மற்றும் உணவுத் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 28.04.2023 தொடங்கி மே மாதம் 14 ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்களும், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.
சென்னை விழா - கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications