சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி... தயாநிதி மாறனுக்குக் கொடுக்க.. அழுத்தம் தரும் லாபி..!
சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை தயாநிதி மாறனுக்கு தர வேண்டும் என்று திடீரென மாறன் சகோதரர்கள் நெருக்கடி கொடுப்பதை சற்றும் எதிர்பார்க்காததால் அக்கட்சி தலைமை அதிர்ந்து போனதாம்.
திமுகவில் முரசொலி மாறன், கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர். டெல்லி லாபிகளைப் பார்த்துக் கொண்டார். கட்சியில் பொதுச்செயலாளர், பொருளாளர் என பதவியில் இல்லாத போதும் அவர்தான் அறிவிக்கப்படாத செயல் தலைவராகவும் இருந்தார்.

வழக்குகளில் தயாநிதி
இதேபாணியில் முரசொலி மாறன் மகன் தயாநிதியும் களமிறக்கப்பட்டார். ஆனால் தயாநிதியைப் பொறுத்தவரையில் அமைச்சர் பதவியை தாண்டி வேறு எதிலும் ஜொலிக்க முடியவில்லை. அந்த அமைச்சர் பதவியை முன்வைத்து பல்வேறு பஞ்சாயத்துகள், வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

மீண்டும் தயாநிதி எம்.பி.
அத்துடன் இல்லாமல் தினகரனில் வெளியான சர்வேயால் மிகப் பெரிய கலாட்டா வெடித்து மிகப் பெரும் துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் வித்திட்டுவிட்டது. கருணாநிதியாலேயே மாறன் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. பின்னர் கண்கள் பணிக்க இதயங்கள் இணைந்தன. இப்போதும் தயாநிதி மாறனுக்கு வழக்கம் போல எம்.பி. பதவி கொடுக்கப்பட்டுவிட்டது.

யாருக்கு மா.செ. பதவி?
இந்த நிலையில் கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ. அன்பழகன் காலமானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாலர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர்தான் திமுக தலைமைக்கு மிக நெருக்கமானவராக மட்டுமல்ல நிதி வசதியிலும் வலுத்தவராகவும் இருக்கிறார்.

தயாநிதிக்கு மா.செ. பதவி வேணுமாம்
இதனிடையே புதிய திருப்பமாக எங்களுக்கு கட்சி பதவியே இல்லையே.. மத்தியிலும் ஆட்சியில் இல்லை.. வெறும் எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆகையால் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி எங்களுக்கே வேண்டும் என தயாநிதி மாறனுக்காக நெருக்கடி கொடுக்கிறதாம் மாறன் குடும்பம். ஏற்கனவே பலவித சந்தேகங்களுடனேயே திமுக தலைமை இவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறது. இந்த நிலையில் கட்சிப் பதவியையே கேட்கிறார்களே... எதற்காக இருக்கும்? என அதிர்ச்சியுடன் விவாதிக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications
