கேஸை சந்திக்க தயார்.. தயாநிதி மாறனின் அவதூறு வழக்கில்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி.. 19ம் தேதி விசாரணை
சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் இன்று நேரில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி. அப்போது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து, நீதிபதியிடம் விளக்கம் தந்தார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வருகிற 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டிருந்தார்.. இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

பிரச்சாரம்: அப்போது அவர் பேசும்போது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பியை சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார்... குறிப்பாக, "மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார்? என்பதை நீங்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றார்.
எடப்பாடி இப்படி சொன்னதுமே, கடுப்பான தயாநிதி மாறன், உடனடியாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கில், "தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
உள்நோக்கம்: எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மத்திய சென்னை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்துக்கும் மேலான தொகையை எனது தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவழித்துள்ளேன். தொகுதியில் செய்யப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்.
பழனிசாமி அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இன்று விசாரணை: இந்த வழக்கு கடந்த மே மாதம் 14ம் தேதி எழும்பூர் 13வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது எடப்பாடி பழனிசாமியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜெயவேல் முன்பாக, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.
அப்போது அவதூறு வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக எடப்பாடி பழனிசாமி நீதிபதியிடம் பதிலளித்தார்.. அத்துடன், விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் அளித்தார்.. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இன்பதுரை: பின்னர் நீதிமன்ற வாசலில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "தயாநிதி மாறன் விவகாரத்தில், பத்திரிகை செய்தி அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்ன்போது பேசியிருந்தார்.. ஆனால், அவதூறு வழககு தொடுக்கப்பட்டுள்ளது.. இது ஏற்படையதில்லை.. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், சட்டப்படி எதிர்கொள்ள போவதாகவும் இன்பதுரை தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications