மனதளவில் ரொம்பவே பாதிப்பு- நாளைக்கு எல்லா முடிவும் தெரியும்: மதிமுக பதவி ராஜினாமா பற்றி துரை வைகோ
சென்னை: தாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில் நாளை நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புவதாகவும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக நேரடி அரசியலுக்கு வந்த பின்னர், செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடியவன் நான். இந்த நேரத்தில் இது உட்கட்சி விவகாரம். எங்களுடைய கட்சித் தலைமை, நிர்வாகிகள்தான் இனி முடிவு எடுக்க வேண்டும்.

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து நான் விலகுவதற்கு என்ன காரணம் என்பதை என்னுடைய அறிக்கையில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் என்ன நினைக்கின்றனர் என்பது நாளை வெளிப்படும். அந்த நிர்வாகக் குழு கூட்டம் எடுப்பதுதான் இறுதி முடிவு. என்னைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சிப் பதவியில் தொடர முடியாது என்கிற காரணத்தை சொல்லி இருக்கிறேன்.
கட்சி என்றால் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதனால் பிற்பகல் முதல் காத்திருக்கும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை. நான் என்னுடைய முடிவைத்தான் தெரிவித்துள்ளேன். நான் ஒரு தொண்டனாக, திருச்சி மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்படுவேன்.
என்னால் கட்சி தலைமைக்கோ, மதிமுகவுக்கோ பிரச்சனை வேண்டாம் என பார்க்கிறேன். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. என்னால் கட்சிக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என பார்க்கிறேன். நான் ஒரு தொண்டனாக, எம்பியாக தொடர்ந்து செயல்படுவேன். என்னை சந்தித்த அவைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்டவர்களிடமும் இதனைத்தான் சொல்லி இருக்கிறேன்.
நான் இந்த கட்சிக்கு அழைக்கப்படும் போது எனக்கு விருப்பம் இல்லை என்றேன். ஆனால் தொண்டர்களின் அன்பினால் இந்த கட்சிக்கு வந்தேன். அப்போதும் கூட தேர்தல் அரசியல் வேண்டாம் என்றுதான் சொன்னேன் . 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை நான். 2024 லோக்சபா தேர்தலில் கூட வேறு ஒருவரைத்தான் நிறுத்த வேண்டும் என்றேன். கட்சிதான் முடிவெடுத்து என்னை நிறுத்தியது.
நான் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து செயல்படுவதற்கு முடியவில்லை. முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அதனால்தான் மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன். தலைவர் வைகோ அழைத்திருக்கிறார். அவரை சந்தித்து பேச இருக்கிறேன். இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications