ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வருகை தராதது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடைபெற்று வருவதால் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரின் தமிழக வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தலில் இதுவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சாரம் தமிழகத்தில் நடைபெறவில்லை. தேர்தலுக்கு முன்னதாகவே பல கட்ட மாநாடுகளை நடத்தி தொண்டர்களை அணி திரட்டிய திமுக, இதுவரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை அழைத்து வரவில்லை. இது கூட்டணிக்குள்ளேயே சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி நிசாமுதின், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, இளைய கம்பன் எழுதி, ஸ்டீபன் ராயல் இசையமைப்பில் உருவான 'தாய்க்கும் தாயான கட்சி' என்ற காங்கிரஸ் கொள்கை முழக்கப் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடைபெற்று வருவதால் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழக வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தில் அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள்.
புதுச்சேரி பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி கேரளா செல்ல வேண்டியிருந்ததாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததாலும் அவர்கள் ஒரே மேடையில் தோன்றவில்லை. இதை வைத்து சில கட்சிகள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. ஆனால், மிக விரைவில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து பிரம்மாண்டப் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்." என்றார்.
உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் த.வெ.க பக்கம் நிற்பார்கள் என விஜய் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கிரிஷ் சோடங்கர், "காங்கிரஸ் பேரியக்கத்தின் உண்மையான தொண்டர்கள் எப்போதும் காங்கிரஸில்தான் இருப்பார்கள். அவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்து செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு தமிழ்நாட்டு மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. எனவே, இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications