மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. தொகுதி மறுவரையறைக்கு பின்னுள்ள அரசியல்.. தராசு ஷ்யாம் கருத்து!
சென்னை: மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா ஆகியவை இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த 3 நாட்களிலேயே இந்த மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாநிலங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

கருப்புக் கொடி போராட்டம்
அதற்கேற்ப இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லில் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதாவை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் அலுவலகம், திமுக எம்பி கனிமொழி வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களும் கூட கருப்பு சட்டை அணிந்து தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திலும் கருப்பு சட்டையுடன் பங்கேற்று வருகின்றனர். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், திமுகவின் இந்தப் போராட்டம் 1965ஐ நினைவுப்படுத்துகிறது. தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்பதற்கான அடையாளம் இது.
2011 சென்சஸ்
மத்திய அரசின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்து தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது. இது டெல்லியின் வாடிக்கை. 1971 சென்சஸ் மற்றும் 2011 சென்சஸ் இருக்கிறது. 1971 அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டது. 2021 சென்சஸ் இதுவரை நடக்கவில்லை. 2023ல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இரு மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின் திடீரென சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். 2011 சென்சஸை அடிப்படையாக வைத்து இடப்பகிர்வு செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்கு பெரிய ஆட்சேபணைகள் அதிகரித்துள்ளன. 2011 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு 9 இடங்கள் வரை கூடுதலாக கிடைக்கும்.
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை
ஆனால் வடமாநிலங்களில் மிகவும் அதிக இடங்கள் கிடைக்கும். எம்பி-க்கள் எண்ணிக்கை தான் எலோக்டோரல் மேப் என்று சொல்வார்கள். ஒரு எம்பி தொகுதிக்கு இத்தனை எம்எல்ஏ-க்கள் என்று.. அதனால் இந்த தொகுதி மறுவரையறை எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை இரண்டையும் பாதிக்கும். நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை. 3ல் இரு பங்கு ஆதரவு தேவை.
பிரதமருக்கு தோல்வி பயம்
அதனால் மத்திய அரசு ஒரு தந்திரத்தை செய்வதற்கு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்பிக்களை கூண்டோடு வெளியேற்றிவிட்டு, இருக்கும் அவையில் 2 பங்கு ஆதரவு என்ற நிலையை உருவாக்குவார்கள். 2029 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு ஏதோ ஒரு வழியை தேடுகிறார்கள். பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சந்திரபாபு நாயுடு நிலைப்பாடு என்ன?
இதுபோன்ற நுணுக்கமான விஷயங்களை மக்களிடம் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு இந்தியாவின் குரல். இது மேற்கு வங்கத்திலும் தொடரும் என்றே நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன திருத்த மசோதாவை எப்படி நிறைவேற்றுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏதோ ஒரு சதி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
எதிர்க்கட்சியினர் மத்தியில் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமையில்லாமையை உருவாக்க நினைப்பார்கள். மோடி அரசு உயிர் வாழ்வது சந்திரபாபு நாயுடு ஆதரவால் தான். இது நாயுடுவுக்கும் பின்னடைவை உருவாக்கும். ஆந்திரா அரசியலிலும் தீமையை உருவாக்கும். சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள தயாராகிவிட்டார்களா? அவருடன் ஆலோசனை செய்தார்களா என்ற கேள்வி எழுவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications