சசிகலா கோட்டையில் கொடி நாட்டும் எடப்பாடி.. ஜம்ப் செய்யும் டெல்டா முக்கிய புள்ளிகள்.. காரணம் இதுதான்
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையிலான மோதல் ஒரு பக்கம் என்றால் தான்தான் அதிமுகவின் பொது செயலாளர் என சசிகலா ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன் என்று சொன்னாலும் ஆக்டிவாக இல்லாத அவரது செயல்பாடுகளால் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிமுகவில் தலைமை பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதல்ல ஜெயலலிதா ஜானகி காலம் தொட்டு அதிமுகவில் நீயா நானா சண்டை தொடர்ந்து வந்திருக்கிறது. அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என தம்பிதுரை பற்றவைக்க ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்த வேண்டியது ஆயிற்று.
ஜெயலலிதா மரணத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்ற நிலையில் அதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தொடங்கி தற்போது எடப்பாடி வரை அனைவருமே சசிகலாவின் காலில் விழுந்து நீங்கள்தான் அடுத்த பொது செயலாளர் ஆக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சசிகலா
இதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார். தொடர்ந்து கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகியான தம்பிதுரை கடிதம் எழுத தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் சசிகலா பக்கம் சாய்ந்தனர். இதனால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மிரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய நிலையில் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக எடப்பாடி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.

எதிராக திரும்பிய அமைச்சர்கள்
அதன் பிறகு சிறை சென்ற சசிகலா தனக்கு எதிராகவே அமைச்சர்கள் திரும்புவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அதற்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு சசிகலாவை ஓரம் கட்டி ஓபிஎஸ் உடன் கரம் கோர்த்தார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் சசிகலாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் அடக்கியே வாசித்தார். பாஜக தலைமையின் அழுத்தம் காரணமாக பொதுவெளிகளில் அவ்வளவாக தலை காட்டாத அவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகாவது தீவிர அரசியல் செய்வார் என எதிர்பார்த்தனர் தொண்டர்கள்.

ஆக்டிவ் இல்லா அரசியல்
ஆன்மீகப் பயணம், அரசியல், சுற்றுப்பயணம் அறிக்கை விடுவது என்றோடு நிறுத்திக் கொண்ட அவர் நீதிமன்ற தீர்ப்பை நம்பி இருக்கிறார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு சாதகமாக வராது என கூறப்படுகிறது. ஏற்கனவே சசிகலா ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளர்களாக மாறி உள்ள நிலையில் தஞ்சை மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகள் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர் .தற்போது டிடிவி தினகரன் சசிகலா இடையே அவ்வளவாக சமூக உறவு இல்லை எனக் கூறப்படுகிறது இதன் காரணமாக டிடிவி தனி கட்சியாகவே செயல்பட்டு வருகிறார்.

சரிந்த ஆதரவு
அதிமுகவும் இல்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இல்லை என்ற நிலையில் சசிகலா ஆதரவு வட்டம் வெகுவாக சரிந்து இருக்கிறது. ஒரு சில முகம் தெரியாத நிர்வாகிகளே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சசிகலா தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை வந்தாலும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுவது இல்லை என உணர்ந்திருக்கின்றனர் டெல்டா மாவட்ட நிர்வாகிகள். இதன் காரணமாக டெல்டா பக்கம் இருக்கும் நிர்வாகிகளை வளைத்து போட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

தாவும் நிர்வாகிகள்
இதற்காக கேபி முனுசாமி களமிறங்கி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு மட்டுமல்லாமல் சசிகலா தரப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வருகிறார். குறிப்பிட்ட சில முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பு டென்ஷன் ஆகி உள்ளதாக கூறுகின்றனர் தஞ்சை பகுதி நிர்வாகிகள். இன்னும் செல்லச் செல்ல சசிகலாவுக்கு மேலும் பல அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் அரங்கேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications