செல்வப்பெருந்தகைக்கு துணை முதல்வர் பதவி? காங்கிரஸ் போஸ்டரால் சலசலப்பு.. திரும்பிப் பார்க்கும் திமுக!
சென்னை: ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. விஜய்யின் 'ஜனநாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தது, திமுக கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, 2026-ல் அமையக்கூடிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற்று, செல்வப்பெருந்தகை துணை முதல்வராக பதவியேற்பார் எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தவெக உடன் காங்கிரஸ் கூட்டணிக்கான அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதற்கு முன்பாகவே, திமுகவை சீண்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் குரல்களை எழுப்பினர். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், அமையப் போகும் புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை துணை முதல்வராக பதவியேற்பார் என்றும் குறிப்பிட்டு, வரும் ஏப்ரல் மாதம் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவித்து "2026-ன் துணை முதல்வரே" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் கவி. கா.மு. A.V.M. ஷெரிப் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் வலுத்து வரும் சூழலில், செல்வப்பெருந்தகை துணை முதலமைச்சராக விரும்பி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது காங்கிரஸ் மட்டுமின்றி, திமுக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுஒருபுறம் இருக்க, திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். "இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படக் கூடாது" என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தான். அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பா.ஜ.க, தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது என செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications