இடிக்கப்படும் 700 வீடுகள்.. சென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அதிரடி.. பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னை அடையாறு ஆற்றின் கரையை ஒட்டி உள்ள அனகாபுத்தூரில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த சுமார் 700 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடையாறு ஆறு தாம்பரம் அருகே ஆதனூரில் தனது பயணத்தை தொடங்கி, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் வந்து இறுதியாக கடலைச் சென்றடைகிறது. இந்த ஆற்றின் முழு நீளம் 42 கி.மீ ஆகும்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை அடையாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நீர்வளத்துறை அடையாறு ஆற்றின் அகலத்தை 100 அடியில் இருந்து 360 அடியாக அதிகரிக்கவும், இதற்காக ஆற்றின் ஓரத்தில் 2.5 கி.மீ நீளத்திற்கு நிலத்தை கையகப்படுத்தவும் முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியது. அதன் ஒரு கட்டமாக அடையாற்றின் ஆற்றங்கரையோரம் உள்ள தரிசு நிலமான 17.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதாவது அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. அவற்றில் 677க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்களுக்கு, அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் தாம்பரம் அருகே கிஷ்கிந்தா செல்லும் சாலையில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்து அங்கேயே குடியிருந்து வந்தனர்.
சென்னை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஏற்கனவே இருமுறை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள டோபிகானா தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டார்கள்.
இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென 50-க்கும் மேற்பட்டோர் பல்லாவரம்- குன்றத்தூர் சாலையில் அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் தான் அடையாற்றின் கரையை அகலப்படுத்த முடியும் என்பதால் பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications