அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
டென்மார்க் குழுவிற்கு போதிய உதவிகளை வழங்கி அவர்கள் மூலம் சென்னையில் இருக்கும் பயன்படுத்தப்படாத நதிகளை மீட்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் நதிகளை மீட்டு எடுப்பதற்காக சர்வதேச திட்டம் ஒன்றுடன் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.
சென்னையில் இருக்கும் பல்வேறு நீர் நிலைகள் சரியான பயன்பாடு இன்றி இருக்கின்றன. சமீபத்தில் கூட அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்கம் கால்வாய் ஆகியவை மக்களால் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாக அறிக்கை வெளியானது.
அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்கம் கால்வாய் மூன்று ஆறுகளும் இறந்துவிட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மக்களின் தினசரி அல்லது கமர்ஷியல் பயன்பாட்டிற்கு இந்த நதிகள் பயன்படாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

கூவம் நதி
கடந்த பல வருடமாகவே சென்னையில் இருக்கும் கூவம் நதிகளை புனரமைக்க பல்வேறு பணிகள் நடந்து வந்தன. ஆனால் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவே இல்லை. இப்போதும் கூவம் நதி மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. கடும் நாற்றத்துடன், சாக்கடை கலந்து மிக மோசமான நிலையில்தான் இந்த கூவம் நதி உள்ளது. இந்த நிலையில்தான் சென்னையில் கூவம் உட்பட பல்வேறு நதிகளை சுத்தப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச உதவியை நாடுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

டென்மார்க்
உலகிலேயே நதிகளை பராமரிப்பதில் முன்னணியில் இருக்கும் நாடு டென்மார்க். அங்கு இருக்கும் 24 நதிகளை இறந்த நிலையில் இருந்து மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது அந்நாட்டு அரசு. சாக்கடைகளாக மாறிபோன நதிகளை மீறி மக்கள் பயன்பாட்டிற்கு டென்மார்க் கொண்டு வந்தது. இதனால் டென்மார்க் உலகில் நதிகளை பராமரிப்பதில் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள் பலர் தங்கள் நாட்டில் நீர் நிலைகளை காப்பதற்காக டென்மார்க் செல்வது வழக்கமாகி உள்ளது.

ஒப்பந்தம்
இந்த நிலையில் டென்மார்க் வல்லுனர் குழுவுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. சென்னையில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் நதிகளை மீட்டு எடுப்பதற்காக சர்வதேச திட்டம் ஒன்றுடன் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. அதன்படி டென்மார்க் குழுவிற்கு போதிய உதவிகளை வழங்கி அவர்கள் மூலம் சென்னையில் இருக்கும் பயன்படுத்தப்படாத நதிகளை மீட்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகத்தின் சுற்றுச்சூழல் ஆலோசகர் காஸ்பர் மேலேண்ட் தலைமையிலான டென்மார்க்கிலிருந்து ஒரு தொழில்நுட்பக் குழு இதையடுத்து சென்னையில் உள்ள நதிகளை சமீபத்தில் பார்வையிட்டது. கூவம், அடையாறு ஆற்றுப்பகுதிகளை இந்த குழு பார்வையிட்டது.

கூவம் ஆறு
அதேபோல் இக்குழுவினர் திருவேற்காடு மற்றும் வேலப்பஞ்சாவடியில் உள்ள கூவம் ஆறு பகுதிகளில் பார்வையிட்டனர். மேலும் மணப்பாக்கம், கோட்டூர்புரம் மற்றும் திரு.வி.க., ஆகிய இடங்களில் உள்ள அடையாறு ஆறுகளை ஆய்வு செய்தனர். நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், டேனிஷ் குழு தொழில்நுட்ப ஆலோசனைகளை நமக்கு வழங்கும். நீர் நிலைகளை சுத்தப்படுவது, அருகே நடைபாதைகள் ஏற்படுத்துவது, படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட ஆற்றோற்ற பகுதி மேம்பாட்டிற்காக ஆலோசனைகளை வழங்குவார்கள்.

நீர் நிலை
முதல் கட்டமாக சோதனை முறை அடிப்படையில் நீர்வழிப்பாதைகளின் சில பகுதிகளில் இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதன்பின் நீர் நிலை முழுக்க செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இங்கே கழிவு நீர் கழிப்பதை தடுத்து, கழிவு நீரை வேறு இடத்தில் சுத்திகரிக்கும் நடைமுறையையும் அரசு மேற்கொள்ள உள்ளது.












Click it and Unblock the Notifications