தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. ஆனால்.. திமுக கூட்டத்தில் சொன்ன வார்த்தைய கவனிச்சீங்களா?
சென்னை: திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஆண்டுதோறும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகைகளின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது இல்லை. இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்துக்களை மட்டும் வெறுப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சித் தலைவராக இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டதில்லை.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழா ஆண்டின் நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சுமார் 4,250 கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துறைமுகம் தொகுதியில் இன்று வழங்கி வாழ்த்தினார் உதயநிதி ஸ்டாலின். மேலும் பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும். திராவிடம் என்ற வார்த்தையை எடுத்து விட்டால் திராவிடமே அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீங்கள் என்ன முயன்றாலும் திராவிடம் இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், "நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தின விழாவின்போது, "நான் படித்தது கிறிஸ்தவ பள்ளியில். கல்லூரியும் கிறிஸ்தவ கல்லூரி. எனது மனைவியும் கிறிஸ்தவர். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை." எனக் கூறியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications