விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? உதயநிதி ஸ்டாலின் அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த முறை போல் இம்முறையும் சரியாக திட்டத்தில் பயனாளர்கள் இணைக்கப்படுவார்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், விடுபட்டவர்களுக்கு எப்போதும் முதல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் அதிகளவிலான மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போதே, சில பயனாளிகள் சேர்க்கப்படவில்லை. அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படாததால், மீண்டும் விண்ணப்பிக்க காத்திருந்தனர்.

மகளிர் உரிமைத் தொகை
இதுகுறித்து சட்டப்பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதாவது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள் இருந்தாலும், அதனை பெற முடியாமல் இருப்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.
சிறப்பு முகாம்கள்
அதற்கேற்ப ஜூன் மாதம் முதல் வாரத்தில் 9 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப ரேஷன் கடைகள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் முகாம்கள் செயல்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கான முகாம்கள் நடக்கவில்லை என்றால், பலரும் விண்ணப்பம் கிடைக்காமல் தவித்தனர். இதனால் இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக் குழு
இதனிடையே இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு எப்போது முதல் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுவினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, எனது உடல்நலக் குறைவால் இந்த வாரம் நடத்தி இருக்கிறோம்.
விளையாட்டு போட்டிகள்
கடந்த ஆண்டு முதல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சில விளையாட்டு போட்டிகளும் நடத்தி வருகிறோம். கோ-கோ, கால்பந்து உள்ளிட்டவற்றில் வெல்பவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் சுமார் ரூ.3,800 கோடி அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். அவர்களை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி.
தேதி அறிவிக்கப்படும்
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே அறிவித்துவிட்டார். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டது. விரைவில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பதற்கான தேதி அறிவிக்கப்படும். கடந்த முறை எப்படி முறையாக செய்யப்பட்டதோ, இம்முறை விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications