நந்தி மீது ஏறி நின்ற பா ரஞ்சித்? பேட்டியால் வந்த சர்ச்சை.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபர புகார்
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து அவர் அந்த பதவியில் நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் பா ரஞ்சித்துக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை.

மேலும் தற்போது வரை பா ரஞ்சித் எந்த ஒரு கட்சியிலும் இணையவில்லை. மாறாக அம்பேத்கர் கொள்கைகள் மற்றும் தலித் மக்களுக்கான அரசியல் பற்றி திரைப்படங்கள் மற்றும் மேடைகளில் பேசி வருகிறார்.
குறிப்பாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு மட்டுமின்றி இந்து மதம் பற்றி அவர் கூறும் கருத்துகளும் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும். இந்நிலையில் தான் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு எதிராக நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை கொடுத்தது பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தான். அவர்கள் வழங்கிய புகாரில், ‛‛இயக்குநர் பா ரஞ்சித் தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‛‛நான் படித்த பள்ளியின் எதிரே ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால் வானத்தை நோக்கி பறந்து விடலாம் என கூறுவர். அதன்மேல் ஏறி நின்று
வானத்தில் பறக்கிறேனா, இல்லையா என்று முயற்சி செய்தேன்
புத்தகம் மீறி ஏறி நின்றால் படிப்பு வராது என்று கூறுவார்கள். நான் வேண்டுமென்று ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதையெல்லாம் செய்திருக்கிறேன். பா ரஞ்சித்தின் இந்த பேச்சு என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. நந்தி வடிவில் உள்ள ஈசனை வணங்கும் பக்தர்களை இழிவுப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். படிப்புக்கு தாயாக விளங்கும் சரஸ்வதி தேவியை புண்படுத்தி உள்ளார். ஏனென்றால் ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர்.
இதனால் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட யூடியூப்பில் இருந்து ரஞ்சித் பேசிய வீடியோவை நீக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தவர்கள் கூறுகையில், ‛‛இயக்குநர் பா ரஞ்சித் மீது பாரத் ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்க வந்தோம். தொடர்ச்சியாக பா ரஞ்சித் இந்து மக்கள், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் தவறுதலாக பேசி வருகிறார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிறு வயதில் புற்று மீதும், நந்தி மீது ஏறி நின்றதாக கூறுகிறார். இதுபோன்று அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரும், அவரை சார்ந்தவர்களும் இந்து மக்களை இழிவுப்படுத்துவதை ஒரு வேலையைாகவே வைத்துள்ளனர். அதனால் அவர் மீது புகார் அளித்துள்ளோம்.
ஏற்கனவே விடுதலை சிகப்பி கடவுள் ராமர் பற்றி சர்சையாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் போய் கொண்டிருக்கிறது. அதேபோல் இவரும், இவரை சார்ந்தவர்களும் இதனை பற்றியே பேசி வருகிறார். இதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications