சர்ச்சைக்கூடமாகும் பள்ளிக்கூடங்கள்... மாற வேண்டியது ஆசிரியர்களா? மாணவர்களா?
சென்னை: தமிழ்நாடு பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் அவமதிக்கும் வகையிலான வீடியோக்கள், செய்திகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் வெளியாகி விவாதத்தை உருவாக்கி இருக்கின்றன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அதீத சுதந்திரத்தை சட்டங்கள் வழங்குவதாகவும் ஆசிரியர்கள் தாக்கக்கூடாது, 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி போன்ற சட்டங்களால் மாணவர்கள் இப்படி நடந்துகொள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உண்மையில் சிக்கல் எங்குள்ளது, இதற்கு என்னதான் தீர்வு என்பதை கண்டறிய ஒன் இந்தியா தமிழ் முயற்சி செய்தது.

அரசுப்பள்ளி ஆசிரியர் என்ன சொல்கிறார்?
இதுகுறித்து முதலில், அரசு பள்ளி ஆசிரியையும், கல்வியாளருமான, எழுத்த உமா மகேஷ்வரியிடம் பேசினோம். இது திடீரென நடக்கும் நிகழ்வு கிடையாது என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகள் நடவடிக்கை மாறி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் எல்லா தவறையும் குழந்தைகள் மீது சுமத்திவிட முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார். "ஆசிரியர்கள் பெற்றோர் சமூகம் எல்லோரும் சேர்ந்து இதை கவனிக்க வேண்டும். அனைவர் மீதும் தவறுகள் உள்ளன. இது அனைத்தும் அரசுப் பள்ளியில் நடப்பதைபோன்றுதான் தொடர்ந்து காட்டுகிறார்கள். குழந்தைகள் எப்போதும் போல்தான் இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பும் குறும்புகார மாணவர்கள் இருந்தார்கள். ஆசிரியர்களை கேலி செய்தார்கள். அப்போது அது வெளியில் தெரியவில்லை. அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் வந்தன. தற்போது சமூக வலைதளங்கள் செல்போன்களால் இதுபோன்ற செய்திகள் அதிகம் பரவுகின்றன.

எல்லா மாணவர்களும் அப்படியல்ல
மொத்தமாக குழந்தைகளே சரியில்லை என்று சொல்லிவிட முடியாது. பள்ளியில் 500 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் 2 குழந்தைகள் அப்படி இருக்கிறார்கள். மாணவர்கள் இதுபோல் மாறுபட்டு நடக்கும்போது ஆசிரியர்களால் கண்டிப்பாக கண்டுபிடித்துவிட முடியும். ஆசிரியர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். உரையாட வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் பெற்றோர்களை அழைக்க வேண்டும். சில பெற்றோர்கள் மாணவர்கள் மீது தவறு இருப்பதையே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இதுபோன்ற நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியை நாட வேண்டும். இப்போது இருக்கும் பள்ளி மேலாண்மை குழு 13 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எல்லா பள்ளிகளிலும் மாதா மாதம் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் பணியே பள்ளியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதுதான். தவறு செய்யும் மாணவர்கள் இருக்கின்றார்கள் என்றால், பள்ளி அவர்களை திருத்த என்ன முயற்சி செய்தது? ஆசிரியர்கள் என்ன செய்தனர்?

பழமைவாதிகளாக இருக்கும் ஆசிரியர்கள்
இன்று ஆசிரியர்கள் எதுவாக இருந்தாலும் அரசு மற்றும் கல்வித்துறையை கைகாட்டி கையை கட்டிப்போடுகிறார்கள் என்று சொல்கின்றனர். அப்படியெல்லாம் இல்லை. மாணவர்களை அடிக்கக்கூடாது என்றுதான் சட்டத்தில் இருக்கிறதே தவிர கண்டிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. கண்டிப்புக்கும் தண்டனைக்கும் வித்தியாசம் உள்ளது. ஆசிரியர்கள் இன்னும் பழமைவாதிகளாக உள்ளனர். அதை இன்னும் பின்பற்றுகின்றனர்.நல்ல ஆசிரியர்களும் உள்ளார்கள். ஆனால், அவர்கள் சொற்பம்தான்.
இன்று ஆசிரியர்களும் மாணவர்களும் பேசிக்கொள்வதே இல்லை. மாணவர்களுக்கு தேவை உரையாடல். மனம் திறந்து பேசுவதற்கு ஒரு நபர் தேவை. உளவியல் சார்ந்து இயங்க வேண்டிய கல்வித்துறை பதிவுகளை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. உளவியல் ஆலோசகராக இருக்க வேண்டிய ஆலோசகர்கள் டேட்டா ஆப்பரேட்டர்களாக மாறியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறைக்கு ரெக்கார்டுகளை அனுப்ப வேண்டும் என்பதால் அதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் குழந்தைகளை தவறவிட்டுவிட்டார்கள்.

அனைவரும் தேர்ச்சி திட்டம்
நானும் அரசுபள்ளி ஆசிரியர்தான். 13 ஆண்டுகளாக நம்மிடம் உள்ள மதிப்பீட்டு முறையை வைத்தே அனைவரும் தேர்ச்சி முறை கொண்டு வரப்பட்டது. அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் அடிப்படை என்னவென்றால் தேர்ச்சியடைய தகுதி உடையவர்களாக மாணவர்களை உருவாக்குவதே. இதற்கான பயிற்சி, வழிகாட்டுதலை வழங்கவேண்டும். ஆனால், மொத்த குறையையும் மாணவர்கள் மீது சுமத்துகின்றனர். பள்ளிகளில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைக்கும் விவகாரத்தில் எடுத்தவுடன் ஆசிரியர்களை குறை சொல்கின்றனர்.
அங்கு என்ன சிக்கல் என்றால், கழிவறை சுத்தம் செய்வதற்கான துப்புரவு பணியாளர்களை நியமிக்கவில்லை. நியமித்தாலும் முறையான ஊதியம். இது தொடர் பிரச்சனையாக உள்ளது. நாங்கள் படித்த காலத்தில் கழிவறை, வகுப்பறை சுத்தம் செய்வதை மாணவர்கள் பிரித்து செய்வோம். இப்போதுபோல் அன்று சாதி ரீதியிலாக இந்த பணிகளை ஏவ மாட்டார்கள்.

அரசியல் செய்யும் ஆசிரியர்கள்
இப்போது ஆசிரியர்களே பல குழுக்களாக பிரிந்துகொண்டு செயல்படுகின்றனர். முறையாக வேலை செய்யாத ஆசிரியர்கள், நன்றாக வேலை செய்யும் ஆசிரியர்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள். சமூகத்தில் நடக்கும் அரசியல் இங்கும் நடக்கிறது. சிறப்பாக பள்ளி மேலாண்மை குழு இயக்கும் பள்ளியிலோ, ஆசிரியருடன் நன்றாக பேசி பெற்றோருடன் நல்ல உறவுமுறையை வளர்த்துக்கொள்ளும் பள்ளியில் இதுபோன்ற பிரச்சனை இருக்காது.
மாதா மாதம் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்த வேண்டும். பிரச்சனைகளை பேச வேண்டும். பேசாமல் விட்டு விட்டு ஒரு நாள் முழு அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை மட்டுமே நடத்துகிறார்கள். ஒரு சிலர்தான் மாணவர்கள், வகுப்பறையை கவனிக்கின்றனர். ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது." என்றார்.

நீளமான முடி, தாடி வைத்திருப்பது தவறா?
மாணவர்கள் அதிக தலைமுடி, தாடியுடன் வருகிறார்கள் என்பதற்காக பள்ளியிலேயே வெட்டிவிடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைவரும் புதுமையை எதிர்பார்க்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் அனைவரும் நடிகர்களை போன்றே தலைமுடி வைத்திருந்தனர். இன்று மாணவர்கள் சினிமாக்களை பார்க்கின்றனர். அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் இருப்பார்கள். விளையாட்டு வீரர்களும் வித்தியாசமான முடி வெட்டிக்கொள்கின்றனர். மாணவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் மனதில் நிற்கிறது.
அவர்கள் மனதில் ஆசிரியர்கள் நிற்க கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டும். இன்று டிரெண்ட் என்ற ஒன்றை மாற்றவே முடியாது. அவர்களால் அதனால் ஈர்க்கப்படும்போது அதை தவறு என்று சொல்வதே கூடாது. அப்படி தெரிந்தால் அந்த கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதில் கவனம் செலுத்துவதைவிட கற்பித்தல் முறை, அணுகுமுறை, கற்றல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். நம் சமூகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதுகுறித்து மாணவர்கள் உணர்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உள்ளது.

எது ஒழுக்கம்?
அதை விடுத்து, இதுபோன்ற விசயங்களை கவனம் செலுத்தி மாணவர்கள் எப்போதும் திட்டினால், ஆசிரியர்களை நிச்சயம் பிடிக்காமல் போகும். எனவே அவர்கள் ஸ்டைலுக்கு இருக்கட்டும். அரசு இதுபோன்ற அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. எனவே நாம் அதை மாணவர்கள் சொல்லலாம். அவ்வளவுதான். எந்த பிரச்சனையை கையில் எடுக்கிறோம் என்பதில் குழப்பம் இருக்கிறது. எனவே இதுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
இன்று கல்லூரி படிப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், தொலைக்காட்சிகள் பணிபுரிபவர்கள் தாடியோடுதான் இருக்கிறார்கள். அதைவைத்து எப்படி ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியும். இதை ஒழுக்கத்தோடு சேர்க்க வேண்டாம். இதுபோன்ற பிரச்சனைகளை மாணவர்களிடம் சரி செய்ய வேண்டும் என்றால், வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஆனால், எதுவுமே நடப்பதில்லை." என்கிறார் வேதனையோடு.

பொழுதுபோக்குகள், வீடியோ கேம்கள் காரணம்
இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும் கல்வி உளவியலாளருமான மருத்துவர் சரண்யா ஜெயக்குமாரிடம் கேள்விகளை எழுப்பினோம். அவர் கூறியதாவது "சட்டங்கள் தற்போது குழந்தைகளை ஆசிரியர்களின் தண்டனைகளிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால், அதை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் குழந்தைகள் தற்போது இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.
குழந்தைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி ஆசிரியர்களை அவமதிப்பேன் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வீடியோ கேம்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. நன்மையை சொல்லிக்கொடுப்பதை விட தவறானவற்றை சொல்லிக்கொடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் சமூக சூழல் இங்கு உள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது மிகவும் அவசியமானது. அந்த காலத்திலிருந்து பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு அடித்துதான் பழக்கம். நாம் பள்ளியில் படிக்கும்போதும் அடிவாங்கி இருப்போம். சிறுவர்களை தாக்கக்கூடாது என இளஞ்சிறார் நீதி சட்டங்கள் வரும்போது குழந்தைகளை தண்டிக்காமல் பாசிட்டிவாக திருத்துவது குறித்து எத்தனை ஆசிரியர்களுக்கு அரசு பயிற்சியளித்துள்ளது என்பது கேள்விக்குறி.
இன்று யூடியூப் வீடியோக்களில் வன்முறைகளை குழந்தைகள் பார்க்கின்றனர். தவறான வார்த்தைகளை கேட்கின்றனர். அப்படி இருக்கக்கூடிய குழந்தைகளை கையாள்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு ஆசிரியர்கள் வேலை செய்வதற்கும் உரிய பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை கட்டாயம் வழங்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் மாற்றம்
ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி சூழலை விட்டு வெளியே மாணவர்கள் இருந்ததால் இத்தகைய மாற்றம் ஏற்பட்டதா என நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ஊரடங்கிற்கு பிறகு அனைவரிடமும் மாற்றம் இருக்கிறது. குழந்தைகளிடம் இது இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது. கல்வியுடனான தொடர்பு அற்றுப்போய்விட்டது. 6 ஆம் வகுப்புக்கு பிறகு ஊரடங்கால் பள்ளிக்கு வராத குழந்தை தற்போது 8 ஆம் வகுப்பில் உள்ளது. 7ஆம் வகுப்பில் அந்த குழந்தை படித்ததா இல்லையா என்பதே தெரியவில்லை. விட்டதிலிருந்தே தொடங்க வேண்டும். திடீரென 8 ஆம் வகுப்பில் அமர்ந்தவுடன் அந்த மாணவருக்கு எதுவும் புரிவதில்லை. படிக்கும் ஆர்வமும் குறைந்துவிட்டது.
ஊரடங்கின்போது ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களை அவமதித்து மாணவர்கள் பழகிவிட்டனர். இதே பழக்கம் நேரிலும் வருகிறது. நான் பள்ளிகளில் மாணவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம், ஊரடங்குக்கு முன்பும் ஊரடங்குக்கு பின்பும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. குழந்தைகள் பேசுவதை கேட்கிறார்கள். ஆனால், பதிலளிப்பதில்லை. வீடியோக்களை பார்த்து பழகியவர்கள் வகுப்பரையிலும் அதையே தொடர்கிறார்கள். ஆசிரியர்களுக்கு பதிலளிப்பதில்லை. இந்த நிலை மாறுவதற்கு நிச்சயம் 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். இந்த காலத்தில் நாம் உயிரோடு இருப்பதே பெரிய விசயம். எல்லாம் வழக்கம்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. அனைத்தும் பெருந்தொற்று காலத்தின் பக்க விளைவுகள். மீண்டு வருவதற்கு நேரமாகும்." என்றார்.

சட்டத்தில் திருத்தம் செய்யலாம்
ஆசிரியர்கள் குழந்தைகளை தண்டிக்கக்கூடாது என்ற சட்டத்தின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்து குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த சட்டம் என்பது இளஞ்சிறார் நீதிச்சட்டத்தின் ஒரு பகுதிதான். இது பல வகைகளில் மாணவர்களை பாதுகாக்கிறது. வேண்டுமென்றால் இதில் சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஒருமுறைக்கு மேல் செய்யும் ஆசிரியர்களை மட்டுமே தண்டிக்க முடியும்.
மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால், அதே தவறை மாணவர்கள் மீண்டும் மீண்டும் செய்யும்போது, மரியாதை குறைவாக நடந்துகொள்ளும்போது சில ஆசிரியர்கள் பொறுமையிழந்துவிடுகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே. இந்த சட்டத்தை கொண்டு வந்தபோதே ஆசிரியர்கள் மாணவர்களை நேர்மறையாக கையாள்வது, திருத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சியளித்திருக்க வேண்டும். அதை நாம் செய்யத் தவறிவிட்டோம்." எனக்கூறுகிறார் வேதனையுடன்.
தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர்கள் நடந்துகொள்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கும் குற்றம்சாட்டு குறித்து பதிலளித்த சரண்யா, "எந்த அளவுக்கு குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் இருக்கிறதோ அதேபோல் பெரியவர்களையும் பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன. ஒரு குழந்தை தவறு செய்தால் அதற்கு சட்டப்படியான தண்டனையை அனுபவிக்க வேண்டும். 18 வயதுக்கு குறையான குழந்தைகள் மீது கூட போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்கிறார்.

பெற்றோரின் ஒத்துழைப்பு தேவை
மாணவர்கள் சீர்திருத்தம் தொடர்பாக பெற்றோர்களின் பங்கு குறித்து பேசிய அவர், "ஆசிரியரும் பெற்றோரும் கைகோர்த்து ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தால் அந்த குழந்தை வீணாக போய்விடும். ஆசிரியர் ஒரு விசயத்துக்கு தண்டிக்கிறார் என்றால் அதில் உள்ள நியாயங்களை பெற்றோர் உணர வேண்டும். சில ஆசிரியர்கள் காழ்புணர்ச்சி காரணமாக சாதி, மத அடிப்படையில் குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை காண முடிகிறது. அது தவறு. அத்தகைய சூழலில் பெற்றோர் ஆசிரியரிடம் கேட்கலாம்.
படிப்பு சார்ந்த விசயங்களில் ஆசிரியர் கண்டிக்கிறார் என்றால் பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் குழந்தை சரியாக வளரும். என் பிள்ளையை கேட்க நீங்கள் யார்? என்று கேட்டால் ஏன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வீட்டில் சரியாக இல்லாத குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் அங்கு ஆசிரியர்கள் திருத்தத்தான் செய்வார்கள்." எனக் கூறி தனது கருத்தை நிறைவு செய்தார்.

போதையின் பிடியில் பள்ளி சிறார்கள்
மாணவர்கள் அதிகளவில் மதுப்பழக்கத்திற்கு இரையாவது குறித்து திருப்பூரை சேர்ந்த மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தின் நிர்வாகியிடம் பேசினோம். "கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் பலர் முறையான கட்டுப்பாடின்றி மது பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறந்ததே இதற்கு காரணம். மதுக்கடைகளை திறக்காவிட்டால் தற்கொலைகள் அதிகரிப்பதாக சொல்கிறார்கள். அதுபோன்றெல்லாம் இல்லை. அவற்றை முழுவதுமாக மூடிவிட்டாலே எந்த பிரச்சனையும் வராது. என்றார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications