ஸ்டிரைக் முதல்நாள்.. வெற்றியா? சொதப்பலா? தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பஸ்கள் இயங்கின! இதோ விவரம்
சென்னை: தங்களது 8 ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. இந்த போராட்டத்தின் முதல் நாளான இன்று எந்த அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் போக்குவரத்து கழகங்கள் தனித்தனியாக இருக்கின்றன. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள போக்குவரத்து கழகங்கள்தான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு போக்குவரத்து கழகத்திற்கு என தனி வரலாறே இருக்கிறது. எந்த வண்டியும் போக முடியாத மலை பாதைகளில் கூட, சொற்ப அளவிலான மக்களுக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.

இப்படி இருக்கையில் இந்த பேருந்துகளை இயக்கும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளர்கள் இந்த கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டத்தால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும்.
தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்க கூடாது.
அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
கடந்த 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. இதே 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை.
ஓட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே புதியதாக ஆட்களை எடுக்க வேண்டும்.
சிஐடியு: இவ்வளவுதான் போக்குவரத்து தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கை. இதை நிறைவேற்றக்கோரிதான் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இன்று முதல் நாள் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் திமுகவின் தொ.மு.ச மற்றும் காங்கிரஸின், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக்கொண்டன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு மற்றும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கங்கள் மட்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
முதல் நாள்: போராட்டத்தின் முதல் நாளான இன்று, பேருந்துகள் எந்த அளவுக்கு இயக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தலைநகரான சென்னையில் தொமுச மற்றும் பயிற்சி ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று ஸ்டிரைக் நடந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.
சிக்கல்கள்: ஆனால் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்பட்டிருக்கின்றன. எனவே தனியார் பேருந்துகளில் கூட்டம் அலை மோதியிருக்கிறது. தென் மாவட்டங்களை பொறுத்த அளவில், பாதி அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் பயிற்சி ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் பாதி வழியிலேயே பழுதாகி நின்றிருக்கின்றன. சேலத்தில் பழுதாகி நின்ற பேருந்தை பயணிகள் தள்ளி ஸ்டார்ட் செய்து ஓரம் கட்டியுள்ளனர்.
அதேபோல சிறிய சிறிய விபத்துக்களும் நடந்திருக்கின்றன. எனவே, பயணிகள் பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். இப்படியாக முதல்நாள் நகர்ந்திருக்கிறது.
என்ன சொல்கிறது தொழிற்சங்கம்?: தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "முதல் நாளில் அரசு தங்கள் பலத்தை காட்ட பயிற்சி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர், தொமுச ஓட்டுநர்கள் மட்டுமல்லாது நிர்வாகிகளையும் பேருந்துகளை இயக்க இறக்கியுள்ளது. எனவேதான் ஸ்டிரைக் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் எத்தனை நாட்களுக்கு இவர்களால் தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்க முடியும்? ஒரு ஷிப்ட் என்பது 16 மணி நேரம், எனவே இவர்களால் அடுத்த ஷிப்டை தொடர வேண்டும் எனில், ஓய்வு அவசியம். எனவே மாற்றுதலுக்கு ஆட்கள் வேண்டும். அப்படியாக யாரும் கிடையாது.
இனிமேதான் பாதிப்பு தெரியும்: எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் வேலை நிறுத்தம் குறித்த பாதிப்பு தெரிய வரும். எனவே இதற்கு இடம் கொடுக்காமல் அரசு தொழிலாளர்களை அழைத்து பேசி சுமுக முடிவை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் எப்போது அழைத்தாலும் செல்வதற்கு தயாராக இருக்கிறோம்" என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
50-60% ஆப்சென்ட்: அதேபோல, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் 50% முதல் 60% போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. உதகையில் 80% மற்றும் பிற பகுதிகளில் 40% முதல் 50% போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் 50 முதல் 60 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிக்கு வரவில்லை என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
மறுபுறம், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மின்சார ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது, நாளை தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். எனவே போராட்டத்தின் தன்மை மாறும் என்று அச்சம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications