கஸ்டடி மரணம் எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் தனிப்படை காவலர்களின் விசாரணையில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி மற்றும் டிஎஸ்பி வசம் தனிப்படைகள் இருப்பது வழக்கம்.

திருப்புவனம் அருகே மடப்புரத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித் குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கஸ்டடி மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, போலீஸ் தனிப்படை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரிலும், தனிப்படை என்ற பெயரில் போலீசார், அந்தந்த உயர் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுவது வழக்கம். இந்த போலீசார் அனைவரும், வெவ்வேறு ஸ்டேஷன்களில் பணிப் பட்டியலில் இருந்தாலும், அவர்கள் உயர் அதிகாரிகளின் கூடவே இருந்து, அவர்கள் சொல்லும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
இத்தகைய தனிப்படை போலீசார், சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். எனினும், அவர்கள் உயர் அதிகாரிகளின் அபிமானம் பெற்றவர்களாக இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. இதுபோன்ற சூழலில் தான் தனிப்படையினர் அத்துமீறல், சிவகங்கை அஜித் குமார் மரணத்துக்கு பிறகு, வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை உணர்ந்த தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உடனடியாக தனிப்படைகளை கலைக்கும்படி அந்தந்த உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எஸ்.பிக்கள், துணை கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பிக்கள் என, பல்வேறு நிலைகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் நடக்கும்போது, அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நோட்டீஸ் கொடுத்து தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தனிப்படைகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. Crime team & Special Team -ல் அனுபவம் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேவையில்லாத துன்புறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கஸ்டடி இருக்கக் கூடாது.
திருட்டு வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முழுமையான Recovery என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தல் கூடாது. ஒரே நபரை முன்று நான்கு நபர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க கூடாது விசாரணை என்ற பெயரில் தேவையில்லாத துன்புறுத்தல்கள் கூடாது. கஸ்டடியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications