மத்திய அரசிடம் எதை கேட்டாலும் 'நஹி... நஹி' தான்! அடப்பாவிகளா என்று கூறி நொந்துகொண்ட தயாநிதி மாறன்!
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்பாக எதைக் கேட்டாலும் நஹி நஹி என்பதை தான் பதிலாக கூறுகிறார்களே தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை என தயாநிதி மாறன் எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழியை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என அவர் வினவினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

திமுக பொதுக்கூட்டம்
தமிழக நிதி நிலை அறிக்கையை விளக்கியும், உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் சென்னை சோழிங்கநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதைக் கேட்டாலும் நஹி நஹி என்பதை தவிர வேறு எதையும் பதிலாக சொல்வதில்லை என வேதனை தெரிவித்தார்.

நஹி நஹி
மேலும், நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழியை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என அவர் வினவினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி நாடாளுமன்றத்தில் பேசவே அனுமதி மறுக்கிறார்கள் என்றும் திமுக எம்.பி.க்கள் தலைகீழாக நின்றும் விலை உயர்வை பற்றி பேசவிடவில்லை எனவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் மா.சு.
ஆங்கிலம் படித்ததால் தான் இன்று கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை என்ற நபர் இருப்பதாகவும் அடப்பாவிகளா மொழியை பற்றி பேசுவதை தவிர வேறு ஒன்றுமே உங்களுக்கு கிடைக்கவில்லையா எனவும் தயாநிதி நொந்துகொண்டார். அவருக்கு முன்னதாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் அமைசர்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் கொரோனாவால் கடந்த ஒரு மாதமாக ஒரு உயிரிழப்பு கூட தமிழகத்தில் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பூஜ்யம் என்ற நிலை
மேலும், தற்போது நாளொன்றுக்கு 20 என்கிற அளவில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் இருந்து வருவதாகவும் இது ஒரு பெரிய எண்ணிக்கை இல்லை எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் காட்டிய வேகமும், அவர் முன்னெடுத்த தீவிர நடவடிக்கையுமே தமிழகத்தில் கொரோனா குறைந்ததற்கு காரணம் எனக் கூறினார். ஏறத்தாழ 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் என்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications