கார்த்தி சிதம்பரம் ஒரே போடு.. ஏற்கனவே "ராமர் அசைவம்" பதிவு.. இப்ப அயோத்தி கோயில்.. செம கடுப்பான பாஜக
சென்னை: அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்தெல்லாம், நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று பாஜகவை சீண்டி மீண்டும் ஒரு பேட்டியை தந்துள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. உணவு விஷயத்தில் கொந்தளித்துபோன அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் என்று கார்த்தி சிதம்பரம் சொன்னதுமே, பலரும் திரண்டு வந்து அந்த பதிவினை படித்தனர்.

அதில், "ராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே. ராமன் வனவாசம் போக வேண்டும் என்ற நிலை வந்தபோது மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான், "அம்மா" நான் இராஜாங்கத்தையும், பரிபாலனத்தையும் இழக்க வேண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும் - அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள்.
அதீத விருப்பம்: ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததால் இருந்துள்ளது. வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது. சகோதரர்கள் (ராமன், லட்சுமணன்) இரவு பட்டினி, பசியால் வாடினர்.
வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (இராமனுக்கு அப்போது வயது 17 தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது. காட்டில் இருக்கும் நிலை தூண்ட, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர். ஒரு காட்டுபன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு ஆகியவற்றை கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்து சமைத்து ஒரு மரத்தடியை தம் வீடாக்கி தின்றனர் - அயோத்தியா காண்டம், சர்க்கம் 52, சுலோகர் (102).
மீன்கள்: சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்று கரைகளில் உலவி வந்த சீதையை திருப்திப்படுத்த மாமிச உணவை கொடுத்து ராமன் கூறினான், "இது ஊட்டமிக்க உணவு, ருசியான திருப்பத்தை தரக்கூடியது - அயோத்யா காண்டம், சர்க்கம் 96, சுலோகர் 1... மேலும் ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி ‛கி' போன்ற மாமிசம் மிக்க நீர்ப்பறவைகளும், மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை.
கம்பராமயணப்பாடல் ஒன்றானது. இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த அருந்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினெள் கொணர்ந்தேன், என்கொல் திருஉளம்? என்ன வீரன் விருத்த மாதவரை நோக்கி முறுவலன், வேடன் குகன் ராமனுக்கு தேனும் மீனும் உணவாகக் கொடுத்ததை விளக்குகிறது'' என பதிவிட்டுள்ளார்.
சைவ பிரியர்: ராமன் ஒரு சைவ பிரியர் என்ற இந்து அமைப்பினரும், பாஜகவினரும் சொல்லி வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பதிவிட்டிருந்தது பேசுபொருளானது. அத்துடன், சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தையும் இது கிளப்பியிருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் ராமர் கோயில் திறப்பு குறித்து, கார்த்தி சிதம்பரம் இப்போது மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், "அயோத்தி கோயில் திறப்பு நிகழ்வை காங்கிரஸ் கட்சி அரசியலாகத்தான் பார்க்கிறது. மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அதை பின்பற்றுவதில் தவறில்லை.
எம்பி தேர்தல்: எம்.பி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி கட்டினால் மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே நிதி வழங்குகிறது. வடமாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரி கட்டினால் ஒரு ரூபாய்க்கு அதிகமாகவே நிதி வழங்குகிறது. முன்னேறுகிற மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு மறுக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளோம்.
பாஜக திட்டங்கள்: அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 10 வருடமாக பாஜக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள்" என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications