தீர்ப்பு எல்லாம் இருக்கட்டும்! சைடு கேப்பில் சம்பவம் செய்த எடப்பாடி.. "அவரை" போய் பார்த்துட்டாராமே!
சென்னை: நேற்று சட்டசபை கூட்டத்தொடருக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி பாஜக எம்எல்ஏ ஒருவரையும் சந்தித்து இருக்கிறாராம்.
ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

தீர்ப்பு சொல்வது என்ன?
ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

நீதிபதி சொன்னது என்ன?
இந்த தீர்ப்பு எல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நேற்று வேறு ஒரு சம்பவத்தையும் செய்து இருக்கிறாராம். அதன்படி நேற்று சட்டசபை கூட்டத்தொடருக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி பாஜக எம்எல்ஏ ஒருவரையும் சந்தித்து இருக்கிறாராம். பாஜகவில் முக்கிய எம்எல்ஏவாக இருக்கும் அவரை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறாராம் . முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசி உள்ளாராம்.தற்போது அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.

சந்திப்பு
இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்லப்படும் நிலையில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம்மேற்கொண்டார். இந்த பயணத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக சில விஷயங்களை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி இருக்கிறாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி அந்த பாஜக எம்எல்ஏவுடன் பேசியதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை
அதில், அண்ணாமலை ஏன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பேசுகிறார். உங்கள் கட்சியில் இருந்து ஒருவர் வந்தால் நாங்கள் ஏற்க கூடாதா? அதிமுகவில் இருந்து ஒருவர் வந்தால் நீங்கள் ஏற்க மாட்டீர்களா? அதை விட்டுவிட்டு அவர் ஏன் கோபம் அடைகிறார். கூட்டணிக்கு எதிராக அவர் பேசுவது எல்லாம் டெல்லிக்குதெரியுமா ? அவர் ஏன் வெடுக்கு வெடுக்கு என்று பேசுகிறார். டெல்லியில் கொஞ்சம் இதை பற்றி பேசுங்கள். ஏன் தேவையின்றி திமுகவை எதிர்க்க வேண்டிய நேரத்தில் நமக்குள் சண்டை போட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த பாஜக எம்எல்ஏவிடம் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications