மழையைக் கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதா?- ஒரு Fact-checking
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தை தற்போது பெரிய புயல் மையம் கொண்டிருக்கிறது.மழையைச் சரியாகக் கணித்துக் கூறவில்லை என்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே முன்வைத்திருக்கிறார்.
"இல்லை, இல்லை. நாங்கள் சரியாகக் கணித்ததால்தான் தேசிய பேரிடர் மீட்பு படை சரியான நேரத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகுதான் தமிழக அமைச்சர்களே களத்திற்கு வந்தார்கள்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இப்படியே போனால் தமிழ்நாட்டில் மழை பெய்ததா? இல்லையா? என்றுகூடச் சர்ச்சை எழுப்பப்படும் போலத் தெரிகிறது. அந்தளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது இந்த மழை அரசியல்.
உண்மையில் மத்திய அரசின் வானிலை ஆய்வு மையம் மழையைக் கணிக்கத் தவறிவிட்டதா? கடந்த வாரம் வானிலை மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட தரவுகள் என்ன சொல்கின்றன? அதில் என்ன உள்ளன?
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி அதிகாலை தொடங்கிய கனமழை 18 ஆம் தேதி இரவு வரை நிற்காமல் பெய்தது. இதில் காயல்பட்டினத்தில் மட்டும் 90செமீட்டருக்கு அதிகமாகக் கனமழை பதிவானது.

கனமழை பெய்யும் என்று மத்திய அரசின் வானிலை ஆய்வு மையம் சொன்னதே தவிர, இவ்வளவு மழை பெய்யும் என்று முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என்று ஒரு திரியை முதன்முதலாகப் பற்றவைத்தார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
இது உண்மையா? என்று பார்ப்போம்.
கடந்த 15 ஆம் தேதி தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும் என்று கணித்துக் கூறி இருந்தார்.
அவரது தகவலின் படி 16 ஆம் தேதி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

அடுத்து 17 ஆம் தேதி பற்றிக் கூறும் போது கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி இருந்தார்.
அதே 18 ஆம் தேதிக்கான அறிவிப்பில் அவர் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று மட்டுமே கூறி இருக்கிறார். பாலச்சந்திரன் சொன்னதைப் போல இந்த மாவட்டங்களில் கனமழை அன்று பெய்தது.
சர்ச்சைகள் பற்றி பாலச்சந்திரன் பதில் என்ன?
ஆனால், அது வரலாறு காணாத அளவில் மழையாகப் பெய்தது. கனமழை என்று மென்மையாகவே அவர் கூறியுள்ளார். அதில் இந்தளவுக்கான தீவிர எச்சரிக்கை அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

அவர் சொன்னபடி 20செமீட்டருக்கு மேல் சென்றால் கனமழை என்பதை மக்கள் அறிவர். ஆனால், 90செமீட்டர் என்பதும் கனமழையில் வருமா என்பதே பரவலாகப் பலரும் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றிப் பதிலளிக்க முன்வந்த பாலச்சந்திரன், "எந்தளவுக்குக் கணித்துச் சொல்ல முடியுமோ அதைத்தான் சொல்லி வருகிறோம். மற்ற விமர்சனங்கள் பற்றி நான் எதையும் சொல்ல முடியாது. 35செமீ மழை பெய்யும் 60செமீ மழை பெய்யும் என்று சொல்லும் படியான கருவிகள் இல்லை. அப்படி இருந்தால் அதைச் சொல்லி இருப்பார்கள்.
மொத்தம் மூன்று வகையான கணிப்புகள்தான் நம்மிடம் உள்ளன. அதில் அதிகபட்சமாக, 21செமீட்டருக்கு அதிகமாக மழை போகும் என்று கணிக்கக் கூடிய முறையே இறுதியானது. அதை வைத்து நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறோம். அதற்கு மேலான வழிமுறைகள் இல்லை.

பலரும் ஏதோ பல புதிய தொழில்நுட்பம் ஒன்று இருப்பதைப் போலவும் அது நம்மிடம் இல்லை என்பதைப் போலவும் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. அறிவியல்பூர்வமாக தான் சொல்கிறோம். டேட்டாவும் மாடலும் சரியாகப் பொருந்துப் போகவேண்டும். டேட்டா சரியாக இல்லை என்றால் யாராலும் கணிக்க முடியாது. அதுவே உண்மை" என்கிறார்
நிதியமைச்சர் சொன்ன தகவல் பொய்யா?
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். அவர், "ஒன்றிய நிதியமைச்சர் சொல்வது அப்பட்டமான பொய். சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் முதலில் ஆரெஞ்சு அலர்ட் தான் கொடுத்தார்கள்.

20செமீட்டர் மழைப் பதிவான பிறகுதான் ரெட் அலர்ட் கொடுத்தார்கள். அப்படி என்றால் அவர்கள் 90செமீட்டர் மழை பெய்யும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டனர். அல்லது அதற்கான போதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் திணறிவிட்டார்கள்.
வானிலை அதிகாரிகள் 90செமீட்டர் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு ஏதேனும் அறிக்கை கொடுத்திருக்கிறார்களா என்று காட்டச் சொல்லுங்கள். கிடையாது அதுவே உண்மை.
அவர்கள் எதிர்பார்த்தது 21செமீட்டர் மழைதான். அதனால்தான் ஆரெஞ்சு அலர்ட் தந்தார்கள். மழையின் தீவிரம் அதிகமானதைப் பார்த்த பிறகே ரெட் அலர்ட் என்று மாற்றி அறிவித்தார்கள்.
ஆனால், ஐரோப்பிய வானிலை மைய அறிவிப்பின்படி 100செமீ மழை கட்டாயம் பெய்யும் என்றது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஏஎஃப்எஸ் கருவியோ 50செமீட்டர் மழை என்று கணித்துச் சொன்னது. இவர்கள் சொன்னது வெறும் 20செமீ மழைதான்.

இந்தியாவிடம் நவீனக் கருவிகள் இல்லையா?
ஆகவே இந்திய வானிலை ஆய்வு மையம் முழுமையாகக் கணிக்கத் தவறி விட்டார்கள். இவர்களிடம் உள்ளது எல்லாம் அரத பழசான கருவிகள். இந்தியாவில் கிளைமேட் மாடல் என்பதே கிடையாது. இவர்கள் யூரோப்பியன் மாடல் அல்லது அமெரிக்கன் மாடலை வைத்தே கணிக்கிறார்கள்.
கடந்த ஆண்டே ஒரு ரேடார் பழுதாகியது. அதை நாம் சொன்ன பிறகே சரி செய்தார்கள். மழைமானிகள் கூட சரியாக இல்லை.
வெளிநாடுகளில் ஒரு ஊரில் மழை பெய்யும் என்றால் அங்கு வசிக்கும் மக்களுக்குக் குறுஞ்செய்தி வரும். எத்தனை செமீட்டரில் இருந்து எத்தனை செமீ வரை மழை பெய்யும் என்ற விவரம் அதில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வளவு நவீன கருவிகள் வந்துவிட்டன.
ஆனால், இந்திய அரசிடம் அப்படியான நவீன கருவிகள் இதுவரை இல்லை. தனியார் வானிலை ஆர்வலர்களே மிகத் தெளிவாகக் கணித்துச் சொல்கிறார்கள். அவர்கள் கணித்துச் சொல்லும் அளவுக்குக் கூட அரசு வானிலை மைய அதிகாரிகளால் கணித்துச் சொல்ல முடியவில்லை. அதுவே உண்மை நிலையாக இருக்கிறது.
வெறுமனே கனமழை, மிதமான மழை என்றுதான் சொல்கிறார்கள். இதை வைத்து எப்படி ஒரு அரசு முன் எச்சரிக்கையாக இருக்க முடியும். செயல்பட முடியும்? மக்களை எப்படி உஷார் படுத்த முடியும்?" என்கிறார்

இவர் சொல்லும் அதே கருத்தைத்தான் அன்புமணி ராமதாஸ் கூட குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஒன்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் இதுவரை அவரது கட்சி உள்ளது. ஆனால் அவரே மத்திய வானிலை ஆய்வு மையம் மழையைச் சரியாகக் கணித்துக் கூறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
தமிழ்நாட்டில் உண்மை நிலை இப்படி இருக்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியிலிருந்து ஒரு கருத்தை முன்வைக்கிறார். மத்தியக் குழுவே தமிழ்நாடு அரசு சரியாக வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்துள்ளது என்று ஆய்வுக்குப் பின்னர் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளது.
ஆனால், களத்திற்கே வராத நிதியமைச்சர் மாநில அரசு மீது பழிபோடுகிறார் என்று பரவலாகப் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்தைப் பதிவு செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
-
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications