"கோபாலபுரம்".. கனிமொழி சொன்ன அந்த வார்த்தை.. வரிந்து கட்டி வரும் "தாமரைகள்".. என்ன ஆச்சு?
கனிமொழியின் பதிலடியால் தமிழக பாஜக ஆத்திரமடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறது
சென்னை: கனிமொழி அப்படி ஒரு பதிலடியை தந்ததுமே, தமிழக பாஜகவுக்கு கோபம் வந்துவிட்டது.. இதையடுத்து, சோஷியல் மீடியாவில், 15 லட்சம் ரூபாய் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் புது வாழ்வு பல்நோக்கு மருத்துவமனை
திறப்பு விழா நடைபெற்றபோது, அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
அவருடன் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்துவைத்தனர்.

கனிமொழி
இதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி பேசினார்.. அப்போது, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சொல்லி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோபாலபுரம் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு கனிமொழி, முதலில் பாரத பிரதமர் தேர்தல் வாக்குறுதியாக தருவதாக சொன்ன 15 லட்சம் பணத்தை பாஜகவினர் முதலில் தரட்டும், அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.

கனிமொழி தடாலடி
கனிமொழியின் இந்த பதிலை கண்டு, தமிழக பாஜக கொந்தளித்துள்ளது.. இந்த 15 லட்சம் சம்பந்தமாக, கடந்த 8 வருடங்களாகவே, மற்ற கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன.. நெட்டிசன்களும், அந்த 15 லட்சம் ரூபாய் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக எத்தனையோ மீம்ஸ்களை இணையத்திலும் உலாவ விட்டு வருகின்றனர்.. சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு அதை ஏழை வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னீர்களே? அது என்னவாயிற்று? அந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர்.

அமித்ஷா
இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடி அப்படி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர்... ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அந்த கேள்வியை கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

எச் ராஜா
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் சொன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியிருக்கிறார். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்த முடியும் என்றுதான் சொன்னார். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று அவர் சொல்லவில்லை.. இதை பெரியகருப்பன் நிரூபிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன்பாக நின்று போராடுவோம் என்று ஒருமுறை எச்.ராஜாவும் ஆவேசமாக கூறியிருந்தார்.

கனிமொழி கிண்டல்
இந்நிலையில்தான் கனிமொழியே இதை பற்றி மீண்டும்பேச, பாஜக திடீரென கனிமொழி மீது கோபம் கொண்டுள்ளது. இதற்கு முதலில் எதிர்வினையாற்றியது, தமிழிசை சவுந்தராஜன்தான்.. "இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என்று பிரதமர் மோடி சொன்னதாக கூறுபவர்கள், அதை நிரூபிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. "கருப்பு பணமும், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் பணமும் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் போடக்கூடிய அளவுக்கானது என்று சொன்னாரே தவிர, வாக்குறுதியாக தரவில்லை" என்ற பிரச்சாரத்தை பாஜகவினர் தற்போது சோஷயல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள்.

அத்வாலே
ஆனால், கடந்த 2018-ல் பாஜகவின் மூத்த தலைவரான ராம்தாஸ் அத்வாலே ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் "15 லட்சம் ரூபாய் ஒரே தடவையாக வராது.. ஆனால், மெதுவாக சிறிது சிறிதாக வரும். அரசிடம் அதிக அளவில் பணம் இல்லை. ஆர்.பி.ஐ-யிடம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுக்கின்றனர்.. ஏதோ தொழில்நுட்ப பிரச்சனைகள் எனக் கூறுகின்றனர். ஆனால், நரேந்திர மோடி திறன்பட செயல்படும் பிரதமர் மற்றும் மக்களின் பல பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளார்" என்றார்.. ஒருபக்கம் அப்படி ஒரு வாக்குறுதியே தரவில்லை என்று பாஜக சொல்லி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரே அப்போது இந்த பேட்டியை தந்திருந்தது சலசலப்பை உண்டாக்கியது.

பூரிப்பு - மகிழ்ச்சி
இதற்கு நடுவில் வேறு ஒரு காமெடி சம்பவமும் நம் நாட்டில் நடந்தது.. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம், பைதான் தாலுகாவைச் சேர்ந்தவர் ஞனேஷ்வர்... இவருக்கு உள்ளூர் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தது... ஒருநாள் திடீரென இவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் இருப்பதாக கணக்கை சோதித்தபோது தெரியவந்தது. அதையடுத்து, உடனே மகிழ்ச்சியடைந்த ஞனேஷ்வர் அந்த பணத்தை பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தனது வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக நினைத்து அதில் 9 லட்சத்தை எடுத்து அழகான வீடு கட்டிவிட்டார்.
Recommended Video

லெட்டர்
அதோடு மட்டுமல்லாமல் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார்.. ஆனால், 6 மாதங்கள் கழித்து, உங்களது வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம் போடப்பட்டு விட்டது. அதை உடனே திரும்ப செலுத்துங்கள்' என்று ஞனேஸ்வருக்கு லெட்டர் வந்தது என்றாலும், இந்த சம்பவம் அப்போது பெரும் வைரலானது.. உண்மையிலேயே 15 லட்சம் தருவதாக மோடி சொன்னாரா? இல்லையா?!












Click it and Unblock the Notifications