தடுமாறுது தாமரை.. பாஜகவுக்கு இப்படி ஒரு பஞ்சாயத்தா? இப்ப ஜவாஹிருல்லாவும் வந்துட்டாரே! என்னாக போகுதோ
சென்னை: தமிழர்களை இழிவாக பேசிய பிரதமர் மோடிக்கு வன்மையான கண்டனங்களை பேராசிரியர் ஜவாஹிருல்லா பதிவு செய்திருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, "புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று சொல்லியிருக்கிறார்.. அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசியிருக்கிறார்.. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருப்பதாக கூறி தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

"ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், மு.க.ஸ்டாலின் இந்த நாட்டை ஆண்டால்தான் என்ன தவறு? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த தலைவர் வீரமணி.
அதேபோல, தமிழக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கெடு ஒன்றை விதித்திருக்கிறார்... "
தமிழர்களை "திருடர்கள்" என்று மோடி பேசியிருக்கிறார்.. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருக்கிறார். எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி , இருவருமே இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தமிழக பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.
ஜவாஹிருல்லா: இப்படிப்பட்ட சூழலில், மனிதநேய மக்கள் கட்சியும் தன்னுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை எனும் பெயரில் நாளொரு வெறுப்பும் பொழுதொரு விஷமும் விதைத்து வருகிறார். பத்தாண்டு ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைச் சொல்ல திராணியற்ற பிரதமர் போகிற போக்கில் வன்மத்தை விதைத்து வருகிறார். பூரி ஜெகநாதர் ஆலயத்தின். பொக்கிசச் சாவி தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது எனத் தன் தகுதிக்கும் குறைவான மலிவான அரசியல் பரப்புரையைச் செய்திருக்கிறார்.
கொள்கை சித்தாந்தம்: கூட்டணியில் சேர்க்காத நவீன் பட்நாயக் மீது உள்ள கோபத்தையும் எரிச்சலையும் பட்நாயக்கின் அரசு நிர்வாகத்தைப் பரிபாலனம் செய்யும் தமிழரான ஐஏஎஸ் அதிகாரி வி கே பாண்டியன் மீது பாய்ந்திருக்கிறார். தமிழர்கள் மீது காலகாலமாக அவரும் அவரது கொள்கை சித்தாந்தத்தின் மீது நம்பிக்கைவைத்திருப்பவர்களும் கொண்டிருந்த வன்மம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் எங்கே இருந்தாலும் எந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டாலும். அதனைச் செவ்வனே நிறைவேற்றித் தருவதில் உலகப் புகழ் பெற்றவர்கள். அதனை எங்கும் சொல்லி மார் தட்டாதவர்கள். பண்டைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரை உலகின் பலநாடுகளில் அமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை தமிழர்கள் அமர்ந்து அந்நாட்டிற்கு அரும்பணியாற்றியிருக்கிறார்கள். தலைநகர் டெல்லி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில், தமிழர்களின் நிர்வாகப் பணி அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மரபணு: நாட்டை காட்டிக் கொடுப்பது, வளத்தைச் சுரண்டி விட்டு நாட்டை விட்டு ஓடுவது தமிழர்களின் மரபணுவில் எப்போதும் இருந்தது கிடையாது. தமிழர்களால் தாய்நாட்டிற்கும். இந்தப் பூமிப் பந்திற்கும். அளவற்ற நன்மைகள் விளைந்து கொண்டிருக்கிறது.
உலகளாவிய பாரம்பரியமும். பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழ்ச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது? இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுக் கொண்ட, அனைத்து மக்களுக்கும் பொதுவான பிரதமர் இவ்வாறு பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார்.
தமிழர்தான்: இதற்காகப் பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஒரு தமிழர் தான். தேர்தலில் மோடி தோற்றால் அதற்கும் தமிழர்கள் மீது பழி சுமத்தினால் ஆச்சரியமில்லை" என்று காட்டமாக கூறியிருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications