தவெக விஜய் தரப்புக்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பளிக்கவில்லையா? திமுகவின் சரவணண் அண்ணாதுரை பதில்
சென்னை: நேற்றைய நீதிமன்ற உத்திரவின் முதல் பக்கத்தை வைத்துக் கொண்டு, தவெகவிற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறது ஒருக் கூட்டம். இந்த வழக்கு ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு. இப்படிப்பட்ட வழக்குகளில் எதிர் தரப்பிற்கு நோட்டீஸ் கொடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது.
இது மனுதாரர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை என தொடரப்பட்ட வழக்கு. இதில் விஜய் தரப்பிற்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை என திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணண் அண்ணாதுரை கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். நேற்று வழக்கு விசாரணையின்போது நீதிபதி, 'கரூர் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சித்தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப்பண்பு இல்லை. அவர்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நீதிபதி, 'கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. கோர்ட்டு இதை கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. த.வெ.க. தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது' என்றும் கருத்து கூறினார்.
இந்நிலையில் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து தவெகவினருக்கு முன்ஜாமீனும் வழங்கவில்லை.. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தவெகவினர், திமுகவினரை கடுமையாக விமர்சித்தனர் மேலும் திமுக திட்டமிட்டு தவெகவை அரசியல் ரீதியாக பழிவாங்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நீதிமன்றத்தில் விஜய் தரப்புக்கு வாய்ப்பே தரவில்லை என்றும் தவெகவினர் குற்றம்சாட்டினார்கள்.
இதனிடையே யூடியூபர் மாரிதாஸ் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு குறித்தும் விமர்சித்தார். திமுக நடத்திய நேற்றய நாடகத்தின் பார்முலா என்று கூறி சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் "நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா?" என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இதேபோல் தவெகவினர் பலரும் விஜய் தரப்புக்கு பதில் அளிக்க வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்ட பதிவில், "நேற்றைய நீதிமன்ற உத்திரவின் முதல் பக்கத்தை வைத்துக் கொண்டு, தவெகவிற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறது ஒருக் கூட்டம். இந்த வழக்கு ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு. இப்படிப்பட்ட வழக்குகளில் எதிர் தரப்பிற்கு நோட்டீஸ் கொடுக்க கூடாது என உச்சநீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. இது மனுதாரர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை என தொடரப்பட்ட வழக்கு. இதில் விஜய் தரப்பிற்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications