அஸ்தமனமாகும் உத்தவ் தாக்கரே அரசியல் எதிர்காலம்.. இன்றோடு எல்லாம் மொத்தமா முடிஞ்சுது! பின்னணி
மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு கடந்த சில காலமாகவே சிக்கல் மேல் சிக்கல் நிலவி வந்தது. அவர்களுக்கு மொத்தம் 9 எம்பிக்கள் இருந்த நிலையில், அதில் 6 எம்பிக்கள் தனிப் பிரிவாக இயங்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் சூழலில், இது உத்தவ் தாக்கரேவின் அரசியல் எதிர்காலத்தை மொத்தமாக முடித்துவிடும் என்றே சொல்லப்படுகிறது
மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பெரும் பரபரப்பு இன்று ஒரு தெளிவான முடிவு கிடைக்கப்போகிறது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவில் இருந்து 6 எம்பிக்கள் பிரிந்து செல்வது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இது அம்மாநில அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

மோதல்
இந்த விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இருந்து தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் ஐந்து எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. இதுவே 'ஆபரேஷன் டைகர்' என்ற பெயரில் எம்பிக்களை இழுக்கும் முயற்சி நடப்பதாகச் சந்தேகத்தைக் கிளப்பியது. உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் ராவத், அந்த எம்பிக்கள் வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறி நிலைமையைச் சமாளிக்க முயன்றார். ஆனால், சஞ்சய் ஜாதவ் போன்ற எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியின் அமைச்சர்களைச் சந்தித்தது அந்தப் பேச்சுகளைப் பொய்யாக்கியது.
சபாநாயகருடன் சந்திப்பு
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பால்கர், பாசாஹேப் வாக்சௌரே, நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் மற்றும் சஞ்சய் தினா பாட்டீல் ஆகிய 6 எம்பிக்களும் கடந்த ஜூன் 16ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரகசியமாக டெல்லிக்குச் சென்றனர். அங்கு நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர். அதே நேரத்தில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் டெல்லிக்குச் சென்றனர்.
மறுநாள் அதிகாலையிலேயே லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்த எம்பிக்கள், தாங்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவசேனாவின் கொள்கைகளில் இருந்து உத்தவ் தாக்கரே விலகிச் சென்றுவிட்டதாகவும் காங்கிரஸில் கட்சியை இணைக்கும் ஐடியாவிலும் உத்தவ் தாக்கரே இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.
இன்று வெளியாகும் அறிவிப்பு
இந்தச் சூழலில் தான் அவர்கள் தனியாக விலகும் அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளனர். இன்று நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், இந்த 6 எம்பிக்களும் சபாநாயகரைச் சந்தித்த போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட உள்ளனர். தாங்கள் ஏன் உத்தவ் தாக்கரே அணியை விட்டு வெளியேறினோம் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்க உள்ளனர். இதற்காகச் சென்னை, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களில் இருந்து எம்பிக்கள் மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, அவர்கள் அனைவரும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் ராவத் கடும் கோபத்தில் உள்ளார். எம்பிக்கள் அனைவரும் கோடிக்கணக்கான பணத்திற்காக விலை போயுள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், கட்சியை முதுகில் குத்திய துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
இந்த அரசியல் நகர்வை மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவோடு அரசியல் விமர்சகர்கள் ஒப்பிடுகின்றனர். அங்கு எப்படி ஒரு குழுவாகப் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைந்தார்களோ, அதே போன்ற ஒரு சூழல் இங்கும் உருவாகியுள்ளது. இந்த மாற்றம் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான எண்களைப் பெற மத்திய அரசுக்கு இது கூடுதல் பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications