ராகுலிடம் பதவி கேட்டாரா விஜய்? விஜயதரணி சொல்வது உண்மையா? நடந்தது என்ன? Fact check
சென்னை: ராகுல்காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்தாரா விஜய்? பாஜகவை சேர்ந்த விஜயதரணி முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை என்ன? அன்று நடந்தது என்ன?
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக ராகுல்காந்தியிடம் ஒரு பொறுப்பு கேட்டதாக விஜயதரணி தெரிவித்த விவகாரம் அரசியல் மட்டத்தில் சூடு பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. சென்னையில் இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயதரணி, "இதுவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதில் இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பாஜகவில் இருக்கவேண்டும் என வந்தேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்புடன் தான் வந்திருக்கிறேன். எல்லோரும் அப்படி நினைத்துக் கொண்டால் அது தவறு. கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல எனக்கு ஏதேனும் ஒரு பதவி தேவை. பாஜகவுக்கு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் பிரச்சினை இல்லை. நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். ஏதேனும் மேலிடத்தில் பேசி எனக்கு நல்லது செய்வீர்கள் என நம்புகிறேன்"என்று பேசி இருந்தார்.
மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முன்பாகவே இந்த விசயத்தை விஜயதரணி போட்டு உடைத்ததால் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தனிப்பட்ட வகையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த விஜயதரணி, விஜய் அரசியல் எண்ட்ரி பற்றி அடுத்த குண்டு தூக்கிப் போட்டுள்ளார். அதாவது விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்குப் பின்னால் ராகுல்காந்தியின் அழுத்தம் உள்ளது என்று ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இது பற்றி விஜயதரணி பேசுகையில், "விஜய் கட்சி ஆரம்பித்ததற்குக் காரணமே ராகுல்காந்திதான். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக ராகுல்காந்தியைச் சந்திக்க விஜய் சென்றபோது காங்கிரஸ் கட்சியின் இணைவதற்கு ஒரு பொறுப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். ஆனால், ராகுல்காந்தி, 'நீங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய திரை பிரபலமாக இருக்கிறீர்கள். தனியாகவே கட்சித் தொடங்கி ஒரு இடத்தை பிடிக்கலாம். அந்தளவுக்கு பலம் கொண்ட நீங்கள் ஏன் ஒரு கட்சியில் பொறுப்பு வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்?' என்று யோசனை கொடுத்தார்.

அதைக் கேட்ட பிறகுதான் விஜய்க்கு தனது பலம் புரிந்து இன்று அவர் தனியாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராகுல் இதை என்றோ சொன்ன யோசனைதான் இது. காங்கிரஸில் அப்போது நான் இருந்ததால் எனக்கு அந்த உண்மை தெரியும். அதை வைத்துத்தான் இப்போது அந்த உண்மையைச் செல்கிறேன். எனவே இயற்கையாகவே விஜய்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கூட்டணி உருவாகலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் என்ன முடிவு எடுப்பார்? யாருடன் சேருவார்? யாரை எதிர்ப்பார் என்பது எல்லாம் இப்போது சொல்வதற்கு இல்லை" என்று கூறியிருக்கிறார்.

விஜயதரணியின் கருத்து பற்றி பேசிய மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை, "கடந்த 10 ஆண்டுகள் முன்னதாக ராகுல்காந்தியை விஜய் சந்தித்தார் என்பது உண்மை. அது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் பொறுப்பு எங்கே கேட்டார். அப்படி அவர் கேட்டாரா என்பதை ராகுல்காந்தியிடம் கேட்டு வேண்டுமானால் சொல்கிறேன்" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
விஜயதரணி சொல்வதைப் போல கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல்காந்தியைச் சந்தித்து இருந்தார் விஜய். அப்போது ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். அவரது அழைப்பின் பேரில்தான் டெல்லி சென்று விஜய் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் காங்கிரசில் இணைய உள்ளதாகவே செய்தி அடிப்பட்டது. புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்டங்களை வழங்கிய விஜய், அரசியலுக்கு வருவதுதான் தன்னுடைய நோக்கம் என்றும் ஆனால், உடனடியாக இல்லை. நிதானமாகவே வர விரும்புவதாகவும் கூட்டத்தில் பேசும் போது விஜய் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியிடம் இருந்து விஜய்க்கு அழைப்பு வந்தது. டெல்லி சென்ற அவர் 2 மணிநேரம் உரையாடல் நடத்தி இருந்தார்.

இந்தச் சந்திப்பு பற்றிப் பேசிய விஜய்யின் அப்பா சந்திரசேகர், நீண்ட காலமாகவே விஜய்யும் ராகுல்காந்தியும் இமெயில் மூலம் ஒரு தொடர்பிலிருந்து வருவதாகக் கூறியிருந்தார். அடிக்கடி தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வார்கள் என்றும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் விளக்கம் அளித்திருந்தார். ராகுல் சந்திப்பு நடந்தது 2009இல். அதன்பிறகு அவர் 2014 ஏப்ரல் மாதம் கோவை வந்த மோடியைச் சந்தித்துப் பேசினார். அதுவும் அப்போதுதான் முதல்முறையாகப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார் மோடி. அதாவது மோடியின் தொடக்கக் கால அரசியலுடன் விஜய்க்கு தொடர்பு ஏற்பட்டு இருந்தது. மோடியுடனான தனது சந்திப்பு குறித்து விஜய் பேசும்போது இது அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை. என்னை மோடி சந்திக்க விரும்பியதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.
மேலும் இச்சந்திப்பு பற்றி பேசி இருந்த விஜய், மோடிதான் தன்னை சந்திக்க விரும்பியதாக தெளிவாகத் தெரிவித்தார். ஆக, ராகுல் காந்தியும் மோடியும் விஜய்யைச் சந்திக்க விரும்பினார்கள். ஒருபோதும் விஜய்யே இந்தச் சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்கும்படி கேட்கவில்லை. அதை அப்போதே விஜய் தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறான செய்தியை விஜயதரணி இப்போது கூறியுள்ளார். ராகுல்காந்தியைச் சந்தித்து விஜய் பொறுப்பு கேட்டதாகச் சொல்லி இருக்கிறார் அவர். அப்படி ஒருபோதும் விஜய் சந்திப்பில் நடக்கவில்லை. ஏனெனில் ராகுல்தான் விஜய்யை அழைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications