டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல.. தனிப்பட்ட பிரச்சனை.. டிஜிபி பரபர விளக்கம்!
சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் எனவும் அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என்றும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
மனைவியுடன் கோவையில் வசித்து வந்த டிஐஜி விஜயகுமார் இன்று காலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்துள்ளார். நேற்று சக காவல்துறை அதிகாரி ஒருவரின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகுமார். இன்று காலையில் சுமார் 6.50 மணியளவில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை மிகவும் வருந்ததக்கது. டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு பணிச்சுமை காரணம் அல்ல, அலுவல் பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் அளித்துள்ளார்.
நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கப்பட்டுள்ளார். மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜயகுமார் எடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட பிரச்சனை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பிரச்சனை என்பதால் அதில் போலீஸ் தலையிட முடியாது. எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications