சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே.. கூட்டணி வரும் கட்சிகளை வம்பிழுத்த திண்டுக்கல்! எடப்பாடி அதிருப்தி
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் கட்சியின் சீனியரான திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு காரணமாக கூட்டணிக்கு வரலாம் என நினைத்திருந்த கட்சிகள் கூட வராமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது மட்டுமல்ல பல நாட்களாகவே சீனியர்களின் பேச்சால் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்ற பிறகு கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சைலன்டாக தனது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்ஐ கட்சியை விட்டே வெளியேற்றினார். அதே நேரத்தில் அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 18 தொகுதி இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் தோல்வி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டமன்றம், கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி என அதிமுக பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வருகிறது அதிமுக. இதற்காக மாவட்டம் தோறும் கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியில் சீனியர்களின் பேச்சு எடப்பாடி பழனிச்சாமியை சங்கடத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோது பாஜகவுக்கு எதிராக சில சீனியர்கள் பேசினர், அதே நேரத்தில் வேலுமணி உள்ளிட்ட சில பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் உடன் கூட்டணி வைக்கலாம் என இருந்தபோது விஜய் நேற்று வந்தவர் அவருடன் எல்லாம் கூட்டணி வைக்க முடியாது என ஒரு சில சீனியர்கள் பேச அடுத்த நாளே அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றி கழகம் அறிவித்தது. இப்படியாக ஏதாவது ஒரு வகையில் சீனியர்கள் பேசி எடப்பாடி பழனிச்சாமி சிக்கலில் மாட்டி விடுகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆன தங்கமணி திருச்சியில் கோஷ்டி பூசல்கள் இருக்கிறது, கட்சிக்குள் மோதல் இருந்தால் எதிர்க்கட்சியாக அமர வேண்டும் என பேசினார்.
அது ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. ஏற்கனவே திருச்சி மாவட்ட அதிமுக பலவீனமானதாக கருதப்படும் நிலையில் தற்போது அமைச்சரின் வெளிப்படையான பேச்சு எதிர்க்கட்சிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், எங்களை எல்லாம் பேட்டி கொடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவிட்டார் கூட்டணி அமையாமல் போய்விடும் என அவர் கூறினார் என பேசி இருக்கிறார். ஒரு கட்சியின் தலைமை சீனியருக்கு போட்ட உத்தரவை பொதுவெளியில் இப்படி போட்டு உடைத்தது ஊடகங்களுக்கு தீனி போட்டது போல ஆகிவிட்டது.
மேலும், "கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் 20 சீட்டு 50 சீட்டு கேட்கிறார்கள், 50 கோடி 100 கோடி கேட்கிறார்கள் என பேசி உள்ளார். இது சொந்தக் கட்சியினர் மட்டும் அல்லாது ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் 100 கோடி 50 கோடி கேட்பார்களாம் என இப்போது மக்கள் பேச தொடங்கி விட்டனர். இதனால் ஏற்கனவே கூட்டணி அமைக்கலாம் என பேசி வந்த கட்சிகள் கூட தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் சீனயர்கள் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பேசாதீர்கள் என சொன்னால் கூட அதையும் பொதுவெளியில் போட்டு உடைத்து விடுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என நெருக்கமானவர்களிடம் நேற்று இரவு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications