சர்ச்சை பேச்சு.. அந்த அர்த்தத்துல சொல்லல! இது பாஜகவின் மலிவான அரசியல் - திண்டுக்கல் லியோனி விளக்கம்
சென்னை: எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை என்றும், இது பாஜகவின் மலிவான அரசியல் எனவும் திமுகவை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
பொன்னேரியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் தலைவரும், திமுக தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார்.

பெண்களுக்கு சொத்துரிமை
இந்த கூட்டத்தில் பேசிய அவர், பெண்கள் என்றாலே அரட்டை அடித்துக்கொண்டு இருப்பவர்கள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கும் ஓட்டு உரிமையை வாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றார். "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர். அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தங்கள் பாடல்களின் மூலம் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த பாரதியார், பாரதிதாசன் வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.

திராவிட புரட்சி
ஒரு காலத்தில் செருப்பை தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை சேர்ந்தவரை இன்று வணக்கத்திற்கு உரிய மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைக்க வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவியவர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் கைகாட்டும் நபரே பிரதமர்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டும் நபரே பிரதமராவார் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என்று பல்வேறு சாதனைகளை படைத்து மக்கள் நலத் திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கிக்கொண்டு இருக்கிறது." என்றார்.

பாஜக புகார்
இந்த நிலையில் லியோனியின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சாதி ரீதியாக மேயரை இழிவுபடுத்திவிட்டதாக பலர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் லியோனி பட்டியலின பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் ஒன்றை கொடுத்தார்.

லியோனி விளக்கம்
இதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள லியோனி, "முன்பு செருப்பை கையிலும் தலையிலும் சுமக்க வைத்து கொடுமைப் படுத்திய ஆதிக்க சமுதாயத்திடமிருந்து விடுதலை பெற வைத்து இன்று பெரும் பொறுப்புகளை பெற வைத்த திராவிட இயக்கமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் என்ற பொருளில் சொல்லப்பட்டது ஒழிய எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல. ஒரு வார்த்தையை எடுத்து, நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்." எனப் பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications