ரொம்ப தொல்லை பண்ணி நடிக்க வைத்தேன்.. அதுவே சரோஜாதேவியின் கடைசி படமாக மாறியது.. கேஎஸ் ரவிக்குமார்!
சென்னை: ஆதவன் படத்தில் மறைந்த நடிகை சரோஜாதேவியை மிகவும் தொல்லை செய்து நடிக்க வைத்ததாகவும், அதுவே அவர்களின் கடைசி படமாக மாறிவிட்டதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சரோஜாதேவி மேக் அப்பில் எப்போதும் குறியாக இருப்பார் என்று கூறிய அவர், வடிவேலு மூலமாக வைத்த வசனத்தை ஜாலியாக எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த சரோஜாதேவி, திங்கட்கிழமையன்று வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார். இவரது உடலுக்கு பலரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சரோஜாதேவியின் கடைசி படம்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் தொடங்கி அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அவரின் நடிப்பில் வெளியான கடைசி படமாக சூர்யா நடித்த ஆதவன் திரைப்படம் அமைந்தது. சூர்யா மற்றும் நயன்தாராவின் பாட்டியாக சரோஜாதேவி நடித்திருப்பார். இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
கேஎஸ் ரவிக்குமார் பேட்டி
இந்த நிலையில் சரோஜாதேவியின் மறைவையொட்டி அவரது நினைவுகளை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், ரொம்ப நாட்களாக சரோஜாதேவி சினிமாவில் நடிக்காமல் இருந்தார்கள். ரொம்ப தொல்லை செய்து நடிக்க வைத்தேன். அதுதான் அவர்களின் கடைசி படமாக அமையும் என்று எனக்கு தெரியாது. ஆதவன் படம் வந்தே 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மறக்கவே முடியாது
அவ்வளவு உறுதுணையாக இருந்தார்.. படப்பிடிப்பின் போது அவர்களை மறக்கவே முடியாது. செட்டிற்கும் வரும் போதே, வணக்கம் டைரக்டர் சார்.. என்ன ஆரம்பித்துவிட்டீர்களா.. சாரி லேட்டாக வந்துவிட்டேனா? என்று கேட்பார். ஆனால் அவருக்கான நேரம் 10 மணி என்று தான் சொல்லி இருப்போம்.. 9 மணிக்கெல்லாம் மேக் அப் உடன் வந்து நிற்பார். அந்த விஷயங்களையெல்லாம் மறக்கவே முடியாது.
மேக் அப் குயின் சரோஜாதேவி
மேக் அப்பில் குறியாக இருப்பார்கள். ஒருமுறை படத்தில் உங்களின் மகன் கதாபாத்திரம் இறந்துவிடுவார்.. அதற்கும் மேக் அப் உடன் வந்திருக்கிறீர்களே என்போம்.. அதற்கு சரோஜாதேவி அவர்கள், குறைக்கவே முடியாது சார் என்றார். அப்போது என்னிடம், நீங்கள் என் வீட்டிற்கு வந்தாலும் கூட மேக் அப் உடன் தான் சந்திப்பேன். எனக்கு எம்ஜிஆர் சொல்லி இருக்காரு.. அதனை படத்திலும் வைத்திருப்பேன்.
வடிவேலுவின் வசனம்
வடிவேலு ஒரு வசனத்தில், தப்பி தவறி கூட அந்த ரூமிற்குள் போய்டாத.. அந்த அம்மா மேக் அப் உடன் படுத்திருப்பாங்கனு சொல்லி இருப்பார்.. அந்த படத்தை பார்த்துவிட்டு எனக்கு தொலைபேசியில் அழைத்து, மேக் அப்பை எடுக்க மாட்டேன் என்று சொல்லியதற்காக படத்திலேயே கிண்டல் செய்கிறாயா என்று ஜாலியாக கேட்டார்.
கடைசியாக சந்திப்பு
சரோஜாதேவியுடன் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. கடைசியாக நடிகர் அர்ஜூன் மகள் திருமணத்தில் தான் பார்த்தேன். அப்போதே கொஞ்சம் உடல்நலம் சரியின்றி இருந்தார். ஆனாலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், வந்துவிடுவார். நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவர்களின் படங்கள், பாடல்களையும் யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications