ஒரு பரிசோதனைக்கு ரூ 25 லட்சம் கேட்ட மருத்துவர்.. அநியாயத்தை கண்ணீர் மல்க விளக்கும் விக்ரமனின் மனைவி
சென்னை: மருத்துவமனையில் தற்போது மெடிக்கல் மாஃபியாதான் நடக்கிறது என இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் ஒரு தொலைகாட்சி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் மனதளவில் நன்றாகத்தான் இருக்கிறேன். ஆனால் எனது கணவர்தான் ரொம்ப மனம் உடைந்து போய்விட்டார். நான் படுத்த படுக்கையாக இருந்தாலும் என் கணவருக்கு தேவையானதை ஆள்களை வைத்து செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

எனக்கு இருக்கும் ஒரே ஆசை, என் மகன் தற்போது சினிமாவில் நடிக்கிறார். அவன் நடிக்கிறதை மட்டும் பார்த்துவிட வேண்டும். அதற்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன். இரவு தூங்கும் போது மாத்திரைகளை போட்டுக்கொண்டு நாளை என் மகனுக்காக உயிரோடு இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வேன்.
என் மகனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நான்தான். மருத்துவமனையில் இப்போதெல்லாம் மாஃபியாதான் நடக்கிறது. என்னை பரிசோதிக்க இன்னொரு மருத்துவர் வந்தார். அவரிடம் எனக்கு சிறுநீர் சரியாக போக முடியவில்லை என்றேன். அதற்கு அவர் ஒரு சிப் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அந்த பரிசோதனைக்கே 25 லட்சம் செலவாகும் என்றார்.
ஒரு வேளை பரிசோதனை செய்து தோல்வியடைந்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டார். இதனால் நான் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. நான் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் மனைவி என்பதால்தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள் என அறிந்து கொண்டே இப்படி பில்லை போட்டு தீட்டுகிறார்கள் என ஜெயப்பிரியா கூறியுள்ளார்.

வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் குச்சிப்புடி நடன கலைஞர் ஆவார். இதுவரை 1000 மேடைகளில் தொடர்ந்து நடனம் ஆடியுள்ளார்.
இதனால் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் வலி ஏற்பட்டதாம். உடனே பதறி போன விக்ரமன் அப்போது இயக்குநர் சங்கத் தலைவராக இருந்ததால் வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றாராம். அங்கு கொடுத்த சிகிச்சையால் ஜெயப்பிரியா இன்று படுத்தப்படுக்கையாக இருக்கிறாராம்.
தனது முதுகில் ஏதோ அறுவை சிகிச்சை செய்தனராம். அப்போது அந்த சிகிச்சை முடிந்ததும் அவரது கால் விரல்களை கூட அவரால் அசைக்க முடியவில்லையாம். 5 ஆண்டுகளாகியும் மருத்துவமனை செய்த தவறுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என ஜெயப்பிரியா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications