ஸ்ரீதர் வேம்பு குடும்பம்! வந்தது நோட்டீஸ்.. சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய மனைவி.. விவாகரத்து வழக்கில் அதிரடி
சென்னை: ஜோஹோ இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி பிரமீளா சீனிவாசனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள சாட்சிகளிடம் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரிக்க ஒரு தனி ஆணையரை நியமிக்க கோரி பிரமீளா சீனிவாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீதர் வேம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும், பிப்ரவரி 25ம் தேதிக்குள் பதிலளிக்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி பெயர் பிரமீளா சீனிவாசன்.
ஸ்ரீதர் வேம்புவும், பிரமீளா சீனிவாசனும் கடந்த 1993ம் ஆண்டில் திருமணம் செய்தனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

ஸ்ரீதர் வேம்பு
இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. கடந்த 2019ல் ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பினார். 2021ல் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிலுவையில் விவாகரத்து வழக்கு
கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வேளையில் மனைவி பிரமீளா சீனிவாசன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னையும், தனது மகனையும் நிர்கதியாக விட்டுவிட்டு ஸ்ரீதர் வேம்பு சென்றுவிட்டார்.
ஜோஹோ நிறுவனத்தில் தனது பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பிற சொத்துகளை அவர் சகோதரி உள்பட குடும்பத்தினர் பெயருக்கு மாற்றினார். விவாகரத்துக்கு பிறகு சொத்தில் சரிபாதியை வழங்க ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இப்படி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிணைத்தொகை
இதனை ஸ்ரீதர் வேம்பு முற்றிலுமாக மறுத்தார். இருப்பினும் கலிபோர்னியா நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி பிரமிளாவின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக 1.7 பில்லியன் அமெரிக்க டாலரை பிணைத்தொகையை பத்திரமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இன்றைய டாலர் மதிப்பில் 15,288 கோடியாகும்.
உயர்நீதிமன்றத்தில் மனு
இதன் தொடர்ச்சியாக தான் பிரமீளா சீனிவாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான சாட்சி, ஆதாரங்களை விசாரிக்க இங்கேயே ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.
பிரமீளா சீனிவாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛கலிபோர்னியா நீதிமன்றம் 2025 அக்டோபர் 2 ம் தேதி அனுப்பிய 'கோரிக்கை கடிதம்' (letter of rogatory) அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆணையர் நியமனம்
இதற்கு நீதிமன்றம், "உள்ளூர் ஆணையரை நியமிக்கக் கோரி, சிவில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியது. அதற்கு வழக்கறிஞர், "வழக்கமாக, உயர் நீதிமன்றமே ஒரு வழக்கறிஞரையோ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியையோ ஆணையராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கும்" என்றார்.
பொதுவாக இதுபோன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் உள்ளூர் ஆணையரை நியமிக்க மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தற்போது பிரமீளா சீனிவாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். விரைவில் ஸ்ரீதர் வேம்பு மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதர் வேம்பு குடும்பத்துக்கு நோட்டீஸ்
இதையடுத்து நீதிமன்றம் ஸ்ரீதர் வேம்பு, அவரது சகோதர, சகோதரிகளான ராதா, சேகர், குமார் உள்பட 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பிப்ரவரி 25ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் நடைமுறை சட்டப்பிரிவு ஆணை 22 விதி 9ன் படி வெளிநாட்டு நீதிமன்றங்களின் கோரிக்கையின் அடிப்படையில் சாட்சிகளை விசாரிக்க தனி ஆணையரை நியமிக்க உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
இந்த ஆணையராக வழக்கறிஞர் அல்லது ஓய்வு நீதிபதி நியமிக்கப்படலாம். இவரது பணி என்பது தமிழகத்தில் உள்ள சாட்சிகளிடம் வழக்கு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களை சேகரித்து அமெரிக்க நீதிமன்றத்துக்கு அனுப்புவது தான் பணி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications