மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்?
சென்னை: இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி சொல்வதாக ஒரு பதிவை சத்யராஜ் மகள் திவ்யா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேயர் பிரியாவுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் அந்த நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி எனும் அறக்கட்டளையை எடுத்து நடத்தி வருகிறார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு சத்தான உணவையும் வழங்கும் வகையில் சேவைகளை செய்து வருகிறார்.

இதை எல்லா தரப்பு மக்களுக்கும் செய்ய அரசியலுக்கு வர விரும்பினார். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தற்போது அவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அண்ணா அறிவாலயத்தில் அவர் முறைப்படி விருப்பமனு அளித்திருந்தார். கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் ஒரு தொகுதியை கேட்டு விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று திமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். அப்போது திவ்யா, கோவை வைஷ்ணவி,போஸ் வெங்கட், மேயர் பிரியா, ராஜீவ் காந்தி உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் திவ்யா தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: "எனது அரசியல் பயணம் குறித்து பகிர்வதற்கு ஒரு நல்ல செய்தி உள்ளது, இன்னும் ஓரிரு நாட்களில் அதை அறிவிப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் படத்தில் திவ்யாவுக்கு மேயர் பிரியா பொன்னாடை போர்த்துகிறார். உடன் சேகர்பாபுவும் இருக்கிறார். எனவே அந்த நல்ல செய்தி என்னவாக இருக்கும் என தெரியவில்லை. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தல் என்றாலும் அதை ஓரிரு நாட்களில் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீட் மறுக்கப்பட்டது: திவ்யா சத்யராஜ், கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியை எதிர்பார்த்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் 'வாரிசு அரசியல்' விமர்சனங்களைத் தவிர்க்கும் நோக்கில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேயர் பதவி வாய்ப்பு?: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பதவி அல்லது அதற்கு இணையான ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. இதையே அவர் "நல்ல செய்தி" எனக் குறிப்பிட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருதுகின்றனர்.
கட்சி விசுவாசம்: சீட் கிடைக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் என்றுமே திமுகவின் சிப்பாய் " என்று கூறி தனது முதிர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
எனவே அவர் அறிவிக்கப்போகும் அந்த "குட் நியூஸ்" மேயர் பதவியா அல்லது கட்சியின் மாநில அளவிலான புதிய பொறுப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications