தாம்பரம் இல்லை.. செங்கல்பட்டில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயில்.. நெல்லை மக்கள் வைத்த கோரிக்கை
சென்னை: சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள செங்கல்பட்டில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயிலை எழும்பூரில் இருந்தோ அல்லது தாம்பரத்தில் இருந்தோ இயக்கினால் தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி இயக்கப்படவில்லை.. அதேபோல் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி,ஈரோடு, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் இடம் இல்லை.. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய ரயில்கள் இல்லை.. இதனால் பல ஆயிரம் பேர் பேருந்துகளையே முழுமையாக நம்பி உள்ளனர். அதேபோல் ஏழை மக்ககள் பலர் சிறப்பு ரயில்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு நெரிசல் இல்லாமல் மக்கள் செல்லும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் போதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.. இதனால் பலர் ஏமாற்த்தில் இருக்கிறார்கள். அதேநேரம் ஒரு சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து வரும் அக்டோபர் 21, 22ம் தேதிகளில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும். அதேபோல, செங்கல்பட்டில் இருந்து 21, 22ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:55க்கு திருநெல்வேலிக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை போத்தனுாரில் இருந்து, வரும் 19ம் தேதி, இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45க்கு சென்னை சென்ட்ரல் வரும் என்றும், சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 20ம் தேதி, பகல் 12:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு மங்களூர் செல்லும் என்றும் சிறப்பு ரயில்கள அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து 22ம் தேதி 1:25க்கு புறப்படும் ரயில் திருவனந்தபுரம் வடக்கு மறுநாள் காலை 8:00 மணிக்கு செல்லும்; அதேபோல சென்ட்ரல்- - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நாளை (ஞாயிறு) காலை 8:00 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி ரயிலை பொறுத்தவரை எழும்பூரில் இருந்து 17, 18, 19ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து கூடஇயக்கப்படவில்லை.. மாறாக சென்னையில் இருந்து 55 கிமீ தூரத்தில் உள்ள செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள செங்கல்பட்டில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications