தீபாவளி சிறப்பு ரயில்.. மின்னல் மாதிரி சர்ருன்னு போச்சே! தொடங்கியவுடன் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து உள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படும்.

போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் இந்த பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவும் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக சுமார் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி இருக்கிறது ரயில்வே. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இருக்கிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் ரயில்வேயின் https://www.irctc.co.in/ என்ற இணையதளத்திலும் அனைத்து ரயில் நிலைய கவுண்டர்களிலும் டிக்கெட்டுகளை பெறலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. இன்று ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதி பயணிக்கலாம். நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10 ஆம் தேதி ரயிலில் செல்லலாம்.
ரயில் டிக்கெட்டுக்கு இன்று முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியான உடனே பலரும் ரயில்நிலைய புக்கிங் கவுண்டர்களிலும், ஐஆர்சிடிசி இணையதளத்திலும் காத்திருந்தனர். புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்தே மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட் புக்கிங் செய்தனர்.
சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். டோக்கன் கொடுத்து அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் காலை 8 மணிக்கு ரயில் நிலையங்கள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதே நேரம் இணையத்தில் 10 மணிக்கே முன்பதிவு தொடங்குகிறது. இதில் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் இணையத்தில் முயற்சிக்கலாம்.
நெல்லை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் டிக்கெட்டுகளை வாங்க போட்டாபோட்டி இருந்தன. முன்பதிவு தொடங்கும் முன்பே காத்திருந்தவர்கள் கூட டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications