ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கு ஆதாரம் இருக்கு! முன்னாள் ஐபிஎஸ் இப்படி பேசலாமா? கி.வீரமணி கடும் தாக்கு
சென்னை: திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி நிகழ்ச்சி ஒன்றில் மிசா காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்று கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் ஜே.பி. நட்டா தமிழகம் வந்த போதும், மதுரையில் வைத்து அண்ணாமலை மீண்டும் இந்த விவகாரம் குறித்துப் பேசியது சர்ச்சையானது.

கி. வீரமணி
இந்தச் சூழலில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி இதற்குப் பதிலடி கொடுத்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கி. வீரமணி, "நாங்கள் எல்லாம் மிசாவில் கைது செய்யப்பட சமயத்தில் நமது இந்நாள் முதல்வர் இளைஞரணியில் இருந்தார்.அப்போது அவருக்குத் திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆகி இருந்தது. அவரை (ஸ்டாலினை) போலீசார் தேடுவதாகத் தகவல் வெளியானது. அப்போது கருணாநிதி வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

தாக்கினார்கள்
அப்போது ஸ்டாலின் வெளியே சென்றுள்ளார்.. வீடு திரும்பியதும் நானே தகவல் தருகிறேன் என்று சொன்னவர் கருணாநிதி! சொன்னபடியே செய்தார்.. எங்களை எல்லாம் முதலிலேயே கைது செய்துவிட்டார்கள். அதன் பிறகு இரு நாட்கள் கழித்து ஸ்டாலினை நாங்கள் இருந்த சென்னை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து வந்தார்கள். எங்களை எல்லாம் சிறையில் போலீசார் தாக்கினார்கள்.

ஸ்டாலின்
இரவு 9 மணி இருக்கும், அப்போது ஸ்டாலினையும் போலீசார் தாக்கினார்கள். 9ஆவது வார்டில் நாங்கள் படுத்துக் கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் மீது ஒரு நபரைத் தள்ளினார்கள். அங்குச் சரியான வெளிச்சம் கூட இல்லை. நாங்கள் பதறியடித்து யார் என்று கேட்டோம். அப்போது தான் "நான் தான் ஸ்டாலின்" என்றார் அவர். அப்போது அவரை கரத்தை பிடித்தோம். அந்த கரத்தை அன்றும் பிடித்தோம் இன்றும் பிடித்தோம் என்றும் பிடித்து இருப்போம்.

ரத்தம் கொட்டியது
இளைஞரான ஸ்டாலினின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. அவருக்கு நாங்கள் ஆறுதல் அளித்தோம். எத்தனை நாட்கள் சிறையில் இருப்போம். எப்போது வெளியே வருவோம்? வெளியே வருவோமா என்று எல்லாம் கூட எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. அதுதான் மிசா! மிசாவில் சிறையில் இருந்த எங்களை எப்படியெல்லாம் தாக்கினார்கள் என்பது இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.

இஸ்மாயில் கமிஷன்
ஸ்டாலின் எப்படி தாக்கப்பட்டார் என்பது குறித்து எல்லாம் தமிழக அரசின் இஸ்மாயில் கமிஷனில் விளக்கப்பட்டு இருக்கிறது. 1976இல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து 1978இல் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை விளக்கப்பட்டு இருக்கிறது. அப்போதே ரத்தம் சிந்திய நபர் அவர். இந்த ஆட்சியைக் குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால் குறுக்கு வழியில் காவிமயமாக்க அரைவேக்காடு அண்ணாமலை எல்லாம் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்கிறார்.

ஆதாரம் இருக்கு
இது தான் ஆதாரம். இந்த ஆதாரத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள். ஒரு தற்குறி இதைப் பேசினால் புறம் தள்ளிவிடலாம். முன்னாள் ஐபிஎஸ் இப்படி பேசலாமா!" என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த செப். மாதம் மதுரையில் பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்றும் மிசா சட்டத்தில் கைதானதை போல் பொய் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications