மொத்தம் 40 தொகுதிகள்.. ட்விஸ்ட் கொடுத்த தேமுதிக.. திமுக கூட்டணியில் முக்கிய மாற்றம்- தராசு ஷ்யாம்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி வலிமை கூடிய சூழலில், தமிழ்நாடு தேர்தலில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், இது தொகுதிப் பங்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதில் நீண்ட காலமாக சஸ்பென்ஸ் நிலவிய சூழலில், அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. இதற்கிடையே தேமுதிக வருகையால் என்ன நடக்கும்.. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தராசு ஷ்யாம்
இது தொடர்பாக அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், "திமுக தரப்பிற்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். காரணம் என்னவென்றால் 2016 தேர்தலிலேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டியது. அப்போது பழம் நழுவிவிட்டது.. பாலில் வர வேண்டியதுதான் பாக்கி என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அது கைகூடவில்லை. விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளர் என்று யார் யாரோ சேர்ந்து கிளப்பிவிட்டார்கள். இதனால் அப்போது மக்கள் நலக் கூட்டணி பிறந்தது.
கடந்த காலச் சம்பவம்
ஆனால், அதற்கு முன்பு 2013ம் ஆண்டிலேயே திமுக- தேமுதிக நெருங்கியது. அப்போது ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்குத் தேவையான நம்பர் இல்லை. அப்போது தேமுதிக தா் ஆதரவு கொடுத்தது. இத்தனைக்கும் 2011ல் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருந்தது. ஆனால், அதன் பிறகு தேமுதிகவை அதிமுக உடைக்க முயன்றது. பல தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியான ஒரு நிலைமை தான் அப்போது இருந்தது. இதுதான் பின்னணி.
இந்தச் சூழலில் தான் இப்போது கூட்டணி அமைந்துள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். சுமார் 20 தொகுதிகள் வரை இதன் தாக்கம் இருக்கும். அதிமுகவுக்கு இதில் பெரிய மனச்சங்கடமாக இருக்கும். அதுவும் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்திலே பிரேமலதா கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், கூட்டணி கணக்குகள் மாறியுள்ளது.
40 தொகுதிகள்
கடந்த தேர்தலில் வெறும் சில ஆயிரம் வாக்குகள் தான் சுமார் 40 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்தது. இதில் சில தொகுதிகளில் தேமுதிகவுக்கு 2000 வாக்கு மட்டுமே கூட இருக்கும். 2000 வாக்கு தானே என்று நினைக்க முடியாது. போட்டி கடுமையாக இருக்கும் தொகுதிகளில் அந்த 2000 ஓட்டு முக்கியமாகிவிடுகிறது.. மதில் மேல் பூனையாக உள்ள தொகுதிகள் தேமுதிகவால் திமுக கூட்டணி பக்கம் வரும்.
தொகுதிப் பங்கீடு
இனி கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக சீட் கிடையாது. காரணம் இடம் இல்லை ஒன்று. காங்கிரஸ் கட்சியில் இப்போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் அல்லது சூழல்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. அரசியல் சலசலப்புகளைச் சிலர் காங்கிரஸ் கட்சியில் உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். அது இல்லை என்றாகிவிட்டது. எனவே இனி திமுகவை பொறுத்தவரையில் அடுத்துத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு பழைய சீட்டுகளே தரப்படும், கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் அதற்கு வாய்ப்பு இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications