தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? எல்.கே.சுதீஷிடம் உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி? நாளை அறிவிப்பு!
சென்னை: சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார். ராஜ்யசபா எம்.பி சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்தது. தேமுதிகவுக்கு சீட் வழங்க எடப்படி ஒப்புதல் தெரிவித்ததாக தகவல்கள் பரபரக்கின்றன.
தேமுதிகவுடன் ராஜ்யசபா சீட் பற்றி ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என ஏற்கனவே ஈபிஎஸ் கூறியிருந்தார். ஒப்பந்தப்படி தேமுதிகவுக்கு மாநிலங்களை எம்.பி பதவி கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா தெரிவித்திருந்தார்.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் கிடைக்கும் சூழல் உள்ளது.
இதில், திமுக சார்பில் 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு?
அதிமுக சார்பில் தற்போது வரை மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எம்.பி சீட் ரேஸில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வித்யா, முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக, கடந்த லோக்சபா தேர்தலின்போது தேமுதிகக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தங்களுக்கு சீட் கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், அப்படி எதுவும் உத்தரவாதம் தரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கூறினார்.
பிரேமலதா சொன்ன பாயிண்ட்
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருகிறோம் என அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம். வார்த்தைகள் முக்கியம். சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.
ஏற்கெனவே 2 முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். அது பேச்சுவார்த்தையில் நாங்களும் ஒப்புக்கொண்டோம். சரி. அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள். இது எங்களின் முறை. எங்களுக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டியது அவர்களின் கடமை" எனத் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி உடன் எல்.கே சுதீஷ் மீட்டிங்
இந்நிலையில் தான் இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசியுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications