இந்தி திணிப்பை.. மட்டன் பிரியாணியுடன் ஒப்பிட்டு ஸ்ரீதர் வேம்புக்கு திமுக சரவணன் கொடுத்த சுளீர் பதில்
சென்னை: மாநிலங்களே மொழி வாரியாகத்தான் பிரிக்கப்பட்டன என்றும் ஸ்ரீதர்வேம்பு தனது பக்கத்து வீட்டில் இருந்து மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிடுவாரா என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் சாதனைகளை கண்டும் காணாதது போல் ஸ்ரீதர் வேம்பு நடிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு, அரசியலாக்குகிறது என்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் நிறைய கற்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியதற்கு, சரவணன் எதிர்வினையாற்றியிருந்தார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு புதியதாக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெறுகிறது. ஆனால் இதை ஏற்க முடியாது என தமிழகம் சொல்லிவிட்டது.
இந்த கொள்கையை ஏற்றால் மட்டுமே 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. இரு மொழிக் கொள்கையே சிறந்தது என தமிழக கல்வியாளர்கள் சொல்லி வரும் நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தை பாராட்டி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் தமிழகத்தில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். உயர் பொறுப்புகளையும் வகிக்கிறார்கள்.கூகுள் தலைமை அதிகாரி கூட ஒரு தமிழர்தான். தமிழ்நாடு என்றாலே அன்று இந்திய அளவில் சேவை துறையில் இருந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க சென்றுள்ளனர். அதற்கு அவர்களின் திறமைகள்தான் காரணம்.
ஒருவருடன் தொடர்பு கொள்ள மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவு என்பது வேறு, மொழி என்பது வேறு, நான் 10 மொழிகளை படிக்க ஊக்குவிக்க போகிறேன். நாம் தெலுங்கையும் ஆங்கிலத்தையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் அதை காட்டிலும் இந்தியை கற்க வேண்டியது சிறப்பான ஒன்று. அப்போதுதான் நாம் மக்களுடன் எளிதில் பழக முடியும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதை மேற்கோள் காட்டிய ஸ்ரீதர் வேம்பு தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்தியின் முக்கியத்துவம் குறித்து ஆந்திர முதல்வர் பேசியிருக்கிறார் பாருங்க, ஆந்திர பிரதேசம் நமது அண்டை மாநிலம், தமிழகத்துடன் கலாச்சார ரீதியில் நெருக்கமான ஒரு மாநிலம்.
ஆனால் அவர்கள் மொழியை அரசியலாக்கவில்லை, அது போல் கேரளாவும் மும்மொழி கொள்கையில் இடம்பெற்றுள்ள சில விஷயங்களை ஏற்க முடியாது என்றுதான் கூறுகிறது. எனவே நம் அண்டை மாநிலங்களில் இருந்து நாம் சிலவற்றை கற்க வேண்டி உள்ளதுதானே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு திமுகவின் வழக்கறிஞர் சரவணன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசியில் தனது பக்கத்து வீட்டிற்கு சென்று வேம்பு, மட்டன் பிரியாணி சாப்பிடுவாரா?
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரும் அவரும் ஒரே மாநிலத்தில்தான் வசிக்கிறார்கள். கலாச்சார ரீதியாக அந்த பக்கத்து வீட்டுக்காரர் வேம்புக்கு நெருக்கமானவர்தான். ஆனால் வேம்பு அதை செய்ய மாட்டார்.

ஆனால் தமிழகம் மட்டும் அண்டை மாநிலங்கள் செய்வதை செய்ய வேண்டும் என்கிறார். பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட உண்மையை கூட வேம்பு மறந்துவிட்டார்.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் அபரிமிதமான வளர்ச்சியை பற்றி அறியாதவர் போல் நடிக்கவும் செய்கிறார். இந்தியை காட்டிலும் தமிழகத்தின் சாதனைதான் முக்கியமானது. திமுக இல்லை என்றால் இந்தியாவில் ஆங்கிலம் எப்போதோ அழிந்து போயிருக்கும். வேம்புவால் அமெரிக்கா சென்று ஜோஹோ எனும் நிறுவனத்தை தொடங்கியிருக்கவே முடியாது. இவ்வாறு சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications