முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் சந்திப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்பு நடத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின், திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் இன்னும் கூட்டணி இறுதியாகவில்லை. 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18 தொகுதிகளில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

இதனிடையே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் சூழலில், திமுக தரப்பில் தொகுதிகளை குறைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் கருத்துக்கள் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் மனசாட்சியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று மாலை சென்னை வந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோருடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு கே.சி.வேணுகோபால் வந்திருக்கிறார்.
இதையடுத்து கே.சி.வேணுகோபால் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், கே.சி.வேணுகோபால், கனிமொழி மற்றும் டிஎஸ் சிங் டியோ உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோரும் கூட அனுமதிக்கப்படவில்லை.
இன்னொரு பக்கம் திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கும் நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இதனால் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் கருத்துக்களை முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் பேசி வருவதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரமாக நடக்கும் இந்த ஆலோசனையில் என்ன நடந்தது என்ற கேள்வி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications