நவமி முடியட்டும்.. காத்திருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள்.. தொகுதி பங்கீட்டை முடித்த திமுக கூட்டணி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தனது கூட்டணியில் எந்தெந்த கட்சியினர் உள்ளனர் என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இன்றைய தினம் நவமி திதி என்பதால் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆள் செய்தாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். அதுவும் ஆன்மீகத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள அரசியல்வாதிகள் எந்த ஒரு காரியத்தையும் நல்ல நேரம் நல்ல நாள் பார்த்துதான் தொடங்குவார்கள். பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். நேற்று வளர்பிறை அஷ்டமி, இன்று நவமி என்பதால் அதிமுக இன்று தனது கூட்டணி கட்சியினருடன் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்து போடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியானாலும் அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சியினர் அறிக்கையாக வெளியாகவில்லை. கூட்டணி உறுதியானது குறித்து ஒப்பந்தம் எதுவும் எந்த கட்சியுடனும் கையெழுத்தாகவில்லை. அதற்குக் காரணம் நவமி திதிதான் என்று காரணம் கூறப்படுகிறது.
தேமுதிக நாளைய தினம் தனது கட்சியில் உள்ளவர்களிடம் விருப்பமனு பெற உள்ளது. 21ஆம் தேதி மனுக்களை திரும்ப அளிக்க வேண்டும். 22ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார்.
அதிமுக பாமக இடையே தொகுதிப் பங்கீட்டுக்கான உடன்படிக்கை 20ஆம் தேதி கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை தைலாபுரத்தில் சந்திப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக, பாமக, அதிமுகவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தால் மட்டுமே யாருடைய கூட்டணியில் யார் என்பது உறுதி செய்ய முடியும்.
இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டியிடுகிறது என்பது குறித்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன. அஷ்டமி, நவமி என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்றைய தினம் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியினருடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக: வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு , நீலகிரி, திருவண்ணாமலை ,வேலூர்,
தென்காசி, தர்மபுரி,கள்ளக்குறிச்சி,பொள்ளாச்சி, தூத்துக்குடி, கோவை, அரக்கோணம், சேலம், தஞ்சாவூர்,பெரம்பலூர்,கடலூர்,தேனி.
காங்கிரஸ்: திருவள்ளூர் (தனி). கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: கடந்த முறை போட்டியிட்டு வென்ற மதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கோவை தொகுதிக்கு பதிலாக இம்முறை திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்தமுறை போட்டியிட்டு வென்ற நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த முறை போட்டியிட்டு வென்ற விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளது.
இந்திய முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், மதிமுக திருச்சி தொகுதியிலும் திமுக கூட்டணியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன. மோடி இதுவரை 6முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று தெரியவரும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. நாளை மறுநாள் தொடங்கி 27ஆம் தேதி வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை வாபஸ் பெற 30ஆம் தேதி கடைசி நாளாகும். இனி எல்லாமே வளர்பிறை நாட்கள்தான். எனவே திமுக கூட்டணி கட்சியினர் ஏற்கனவே நேர்காணல் நடத்தி வேட்பாளர் யார் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்று தயார் நிலையிலேயே உள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அதிமுகதான் முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கி பிரச்சாரம் வரை எதிலுமே முந்தியிருக்கும். ஜெயலிதா மறைவிற்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளை இன்னமும் இறுதி செய்யவில்லை.
கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று முடிவு செய்து அதன் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகி வேட்பாளர் யார் என்று முடிவு செய்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சியினருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications