"அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கலையே".. பிஸியான முதல்வர்.. எதிர்பார்ப்பில் கூட்டணிகள்.. மீட்டிங் நடக்குமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் சந்திக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் பிஸியாக இருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் அதிமுகவில் மோதல், இன்னொரு பக்கம் பாஜகவின் பல்வேறு போராட்டங்கள், தொடர் ரெய்டுகள் என்று களம் சூடாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் நகராட்சி தேர்தலும் நடக்க உள்ளது.
இந்த நகராட்சி தேர்தல் தேதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்துவிடும்.

விவாதம்
இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் ரீதியாக சில பல விசயங்களையும் கோரிக்கைகளையும் வைத்து ஸ்டாலினிடம் விவாதிக்க நினைக்கின்றனர் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள். ஆனால், சந்திப்புக்கு நேரம் கேட்டால் முதல்வர் ஸ்டாலினின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறதாம். காரணம் முதல்வர் அலுவல் ரீதியாக பிஸி!

முதல்வர் பிஸி
அவ்வப்போது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக அறிவாலயத்துக்கு அழைத்து ஸ்டாலின் விவாதிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சிகளிடம் இருக்கிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களில் பிஸியாகிவிட்டார். கொங்கு மாவட்ட பயணம், முப்படை தளபதி பிபின் ராவத் மரணம், கொரோனா கட்டுப்பாடு, தினசரி அலுவல் பணிகள் இது போக மழை, வெள்ள பாதிப்பு என்று முதல்வர் கடுமையாக பிஸியாகிவிட்டார்.

சந்திப்பு
இதை கூட்டணி கட்சிகளும் உணர்ந்து இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் எங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அவரும் என்ன செய்வார். கடுமையாக பிஸியாக இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது இருந்த ஸ்டாலினை எளிமையாக சந்தித்துவிட்டோம். ஆனால் இப்போது அவர் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார் என்பது எங்களுக்கும் தெரியும் என்று கூட்டணி கட்சிகள் தெரிவிக்கின்றன.

மீட்டிங்
இருந்தாலும் கிடைக்கிற நேரத்தில் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்தால் எங்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கும் என்று கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கருதுகிறார்களாம். அதற்கு திமுக தரப்போ, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு சரிதான். அது முதல்வருக்கும் தெரியும். விரைவிலேயே மீட்டிங் நடக்கும். மழை வெள்ளம், முப்படை தளபதி மரணம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிட்டன.

சந்திப்பு நடக்கும் விரைவில்
இதனால் கட்சி ரீதியான சந்திப்புகளை முதல்வர் நடத்த முடியவில்லை. அதேபோல் சில வழக்குகள், ரெய்டுகளிலும் முதல்வர் தனிப்பட்ட வகையில் கவனம் செலுத்தினார். விரைவிலேயே அவர் கூட்டணி தலைவர்களை சந்திப்பார் என்று தகவல் பறந்து இருக்கிறதாம். நகராட்சி தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி சந்திப்பு நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications